ஓய்வெடுக்காமல் உழைத்தவர் அண்ணா நினைவிடம் அருகே ஓய்வு எடுக்கிறார்...


ஓய்வெடுக்காமல் உழைத்தவர் அண்ணா நினைவிடம் அருகே ஓய்வு எடுக்கிறார்...
x
தினத்தந்தி 8 Aug 2018 11:30 PM GMT (Updated: 2018-08-09T05:30:13+05:30)

அலைமோதிய தொண்டர்களின் அழுகுரலுக்கு இடையே, 21 குண்டுகள் முழங்க, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை,

உடல்நல குறைவின் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார்.

இதை அறிந்ததும் அங்கு கூடி இருந்த தொண்டர்கள் கதறி அழுதனர். பின்னர் கருணாநிதியின் உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்தி முடிந்ததும், நள்ளிரவில் சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலையில் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது துக்கம் தாங்காமல் பலர் கதறி அழுதனர்.

கருணாநிதியின் உடல் மாலை 3.55 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கருணாநிதியின் உடல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அவர்கள், அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றினார்கள். அதன்பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வந்தன.

எனவே ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் சிவானந்தா சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா காமராஜர் சாலையை நோக்கி சென்றது. இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டு நடந்து சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலை 6 மணி அளவில் இறுதி ஊர்வலம் அண்ணா நினைவிடத்தை நெருங்கியது. கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்த ராணுவ வாகனம் 6.15 மணிக்கு, உடல் அடக்கம் நடைபெறும் இடத்தின் அருகே வந்தடைந்தது.

அப்போது அங்கிருந்த தலைவர்கள் எழுந்து ஊர்வலத்தில் வந்த மு.க.ஸ்டாலின் கையைப் பிடித்து ஆறுதல் கூறினார்கள். 6.20 மணிக்கு கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது முப்படை வீரர்கள் அணிவகுத்து வர, வாத்தியமும் இசைக்கப்பட்டது.

பின்னர், கருணாநிதியின் உடலுக்கு தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு, முப்படை வீரர் கள் வாத்தியம் இசைக்க அனை வரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து, கருணாநிதியின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அகற்றப்பட்டு, முறைப்படி மடிக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிறகு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலுக்கு மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 6.45 மணி அளவில் கருணாநிதியின் உடல் கண்ணாடி பெட்டியில் இருந்து சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது. பின்னர் மீண்டும் கருணாநிதியின் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். அப்போது பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். கருணாநிதியின் மகள் செல்வி கதறித் துடித்தார்.

அதன்பின்னர், கருணாநிதியின் உடலைச் சுற்றி அவரது குடும்ப உறுப்பினர்கள் உப்பை தூவினார்கள். சரியாக 6.55 மணிக்கு கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தன பேழை மூடப்பட்டது. அந்த நேரத்தில், மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பலர் கண் கலங்கினார்கள்.

அதன்பிறகு, அடக்கம் செய்யப்படும் குழிக்கு கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தன பேழை கொண்டுவரப்பட்டது. இரவு 7 மணிக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் உடல் குழிக்குள் மெதுவாக இறக்கப்பட்டது. அதன்பின்னர், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கையில் மணலை அள்ளி குழிக்குள் போட்டனர். அவர்களை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் குழிக்குள் மணலை போட, கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு, கனத்த இதயத்துடன் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்ற கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், ராம்தாஸ் அத்வாலே, முன்னாள் மத்திய மந்திரிகள் வீரப்ப மொய்லி, ஜெகத்ரட்சகன், தமிழக அரசு சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், இலங்கை மந்திரிகள் செந்தில் தொண்டைமான், ஆறுமுக தொண்டைமான், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், புதியநீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஓய்வுபெற்ற ஐ.ஜி.க்கள் சந்திரசேகர், சிவனாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மனிதத்தலைகளாக காட்சி அளித்தது. மெரினா கடற்கரை சாலையிலும் தொண்டர்கள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

Next Story