பழிச்சொல் வீசுவதைக் கண்டு கலங்க மாட்டோம்.. கடமை தவறவும் மாட்டோம்.. அமைச்சர் ஜெயக்குமார்


பழிச்சொல் வீசுவதைக் கண்டு கலங்க மாட்டோம்.. கடமை தவறவும் மாட்டோம்.. அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 10 Aug 2018 6:37 AM GMT (Updated: 10 Aug 2018 6:37 AM GMT)

பழிச்சொல் வீசுவதைக் கண்டு கலங்க மாட்டோம், கடமை தவறவும் மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #ADMK #EdappadiPalaniswami #O_Panneerselvam

சென்னை

அதிமுக அரசு மீது, திமுக பழிச்சொல் வீசினால் அதனை கண்டு தாங்கள் கலங்கப்போவதும் கிடையாது, கடமை தவறப்போவதும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-

முரசொலி நாளிதழில் வெளியான கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு மீது அபாண்டமான குற்றச்சாட்டையும், நஞ்சை விதைக்கும் பழிச் சொல்லையும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்தும் மெரினாவில் இருந்து அவரது நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் எனவும் மேடைபோட்டு பேசிய திமுக-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா.

ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்தவும், அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராகவும் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், அதனால் ஏதாவது சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு கடைசி நேரத்தில் குழப்பம் உருவாகும் என்பதால்தான் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளை போட்டு அவமானத்தையே பரிசளித்த திமுக-வினருக்கு, அதிமுக அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது என்றும், பழிச்சொல் வீசும் பழைய பாதையிலேயே திமுக பயணிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இப்படி பழிச்சொல் வீசுவதைக் கண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தாங்களும் கலங்கப்போவதுமில்லை; கடமை தவறப்போவதுமில்லை என்றும் ஜெயக்குமார் காட்டமாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story