தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்


தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்
x
தினத்தந்தி 10 Aug 2018 11:30 PM GMT (Updated: 2018-08-11T03:31:49+05:30)

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை,

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வருகிற 15-ந்தேதி அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.

இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உயர் போலீஸ் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். சென்னை முழுவதும், சுதந்திர தின விழாவையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கோட்டையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை வளாகம் இப்போதிருந்தே பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா நடைபெறும் வேளையில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லாட்ஜ்களில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால் அதுபற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று லாட்ஜ் நிர்வாகத்தினருக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய விமான நிலைய பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்படை போலீசார், விமான நிலைய போலீசார் கூட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான நிலைய சுற்றுப் பகுதிகள் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் வருகிற 22-ந்தேதி நள்ளிரவு வரை பார்வையாளர்கள் அனுமதிக்கும், பயணிகள் திரவ பொருட்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மீனம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்களை நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தி பலத்த சோதனைக்கு பின்னரே உள்ள செல்ல அனுமதிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் கடல்வழி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும், கடல்பகுதியில் அதிவேக நவீன எந்திரபடகுகளில் ரோந்து சுற்றிவர திட்டமிட்டுள்ளனர்.

Next Story