மாநில செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க நடவடிக்கை + "||" + By the Sri Lankan navy Arrested Tamil fishermen Action to free 27 people

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க நடவடிக்கை
தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை,

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.


இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது மட்டுமன்றி, இலங்கை அரசு தற்போது கொண்டுவந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்து, நமது கடற்பரப்புக்குள் மீன்பிடித்தாலும் எல்லை மீறி நுழைந்து கைது செய்து அச்சுறுத்துவதும், புதிய சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதும் இலங்கை அரசின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது.

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 27 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களுக்கு சொந்தமான 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இலங்கை அரசின் புதிய மீன்பிடித் தடை சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தராது என்றும் கூறப்படுகிறது. தவறு செய்யாத மீனவர்களுக்கு வழங்கப்படும் இந்த தண்டனை மிகவும் கொடூரமானதாகும்.

இதுவரை விசைப்படகு மீனவர்களை மட்டுமே கைது செய்து வந்த இலங்கை கடற்படையினர் இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் கைது செய்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை சீண்டிப் பார்க்கின்றனர் என்று தான் கருத வேண்டியது உள்ளது. இந்தப் போக்குக்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தற்போது கைதாகி உள்ள 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களின் 4 நாட்டுப்படகுகளை மீனவர்களிடம் ஒப்படைக்கவும் மத்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.