கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை


கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2018 11:15 PM GMT (Updated: 16 Aug 2018 10:22 PM GMT)

கனமழை எதிரொலியாக முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கம்பம்,

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக- கேரள மாநில எல்லையில் குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது.

குமுளி அருகே உள்ள இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 2 ஆயிரத்து 200 கன அடியில் இருந்து, 2 ஆயிரத்து 336 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் இரைச்சல் பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் முல்லைப்பெரியாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. லோயர்கேம்ப் முதல் வைகை அணை வரை முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மூல வைகை ஆற்றில் தண்ணீர் வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 65 அடியை நெருங்கியது. வினாடிக்கு 5 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 62 ஆயிரத்து 749 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சத்தியமங்கலத்தில் 250 வீடுகளையும், பவானிசாகரில் 250 வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

கோபியில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பைக்கு தனியார் பள்ளி வேன் மாணவ- மாணவிகளை அழைத்து வருவதற்காக சென்றது. அங்குள்ள ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பள்ளி வேன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பாதியளவு பகுதி தண்ணீரில் மூழ்கியது. வேனில் இருந்த டிரைவர், பெண் உதவியாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதால் அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 685 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருமூர்த்தி அணையில் இருந்து வினாடிக்கு 619 கன தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சற்று உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் நொய்யல் ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நொய்யல் ஆற்றின் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நெல்லை

பலத்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும், சேர்வலாறு அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 814 கனஅடியும், கடனா நதி அணையில் இருந்து வினாடிக்கு 1,132 கன அடியும், கருப்பாநதி அணையில் இருந்து வினாடிக்கு 1,150 கன அடியும் திறந்து விடப்பட்டது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிக அளவு கொட்டுவதால் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் முண்டந்துறை இரும்பு பாலம், சேரன்மாதேவி, ஏரல் தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. கைலாசபுரத்தில் தாமிரபரணி ஆற்றுக்குள் இருக்கும் கல் மண்டபங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.

சிந்துபூந்துறையில் கீழத்தெருவில் உள்ள விநாயகர் சிலை முன்பு உள்ள படித்துறையை தொட்டபடி வெள்ளம் செல்கிறது. கொக்கிரகுளத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்காக போடப்பட்டிருந்த தளவாட பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டது.

குமரி

குமரி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. நித்திரைவிளை, மங்காடு, பள்ளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளம் வடியவில்லை. அந்த பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். தெரிசணம்கோப்பை- அருமநல்லூர் சாலை, குற்றியாணி பகுதி ஆகிய இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story