தொழிலாளர்கள் பெயரில் வங்கிகளில் ரூ.200 கோடி கடன் வாங்கி மோசடி 5 பேர் கைது


தொழிலாளர்கள் பெயரில் வங்கிகளில் ரூ.200 கோடி கடன் வாங்கி மோசடி 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sep 2018 11:27 PM GMT (Updated: 2018-09-05T04:57:14+05:30)

பல்வேறு வங்கிகளில் மில் தொழிலாளர்கள் பெயரில் ரூ.200 கோடி கடன் வாங்கி மோசடி செய்த பருப்பு மில் அதிபர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி,

விருதுநகரை சேர்ந்தவர் வெயில்முத்து (வயது 37). இவர் விருதுநகரில் வேல்முருகன் (61) என்பவர் நடத்திவரும் பருப்பு மில்லில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

ஒரு ஆண்டுக்கு முன்பு என்னையும், என்னோடு கூலி வேலை பார்க்கும் விருதுநகரை சேர்ந்த காளியப்பன், மாரியப்பன், தங்கமாரி, காளிதாஸ், கணேசன் ஆகியோரை பருப்பு மில் உரிமையாளர் வேல்முருகன், அவருடைய அக்கா மகன் செண்பகன் (56), செண்பகனின் மகள் இந்துமதி (28) ஆகியோர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரவேண்டும் என்று கூறி தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அழைத்து வந்தனர். அங்கு பல பத்திரங்களில் கையொப்பம் வாங்கினார்கள்.

இந்நிலையில் நான் ரூ.37 லட்சத்து 46 ஆயிரம் கடன் பெற்றுள்ளதாகவும், அதற்கு வட்டியுடன் ரூ.40 லட்சத்து 14 ஆயிரத்து 865 கட்ட வேண்டும் என்றும் எனக்கு வங்கியில் இருந்து கடிதம் வந்தது. இதுகுறித்து வங்கி கிளை மேலாளரிடம் கேட்டபோது, தானிய சேமிப்பு கிட்டங்கியில் நான் நவதானியம் இருப்பு வைத்ததன் பேரில் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது கிட்டங்கியில் நவதானியம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதேபோல், மில்லில் வேலைபார்க்கும் பலரின் பெயரில் கடன் வாங்கி மோசடி நடந்துள்ளது. மில்லின் உரிமையாளர் வேல்முருகன், அவருடைய உறவினர்கள் செண்பகன், இந்துமதி ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வேல்முருகன், செண்பகன், இந்துமதி ஆகிய 3 பேர் மீதும் ஜூலை மாதம் 30-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இந்த வழக்கில் செண்பகன், வேல்முருகன் ஆகிய 2 பேரையும் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் இந்த மோசடியில் இந்துமதியின் கணவர் விமல்குமார், மில்லில் கணக்காளராக வேலை பார்க்கும் கலைச்செல்வி (54), இடைத்தரகர்கள் சோலைராஜ், சன்னாசி (35) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

இதில் கலைச்செல்வி, சோலைராஜ் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்துமதியும், அவருடைய கணவர் விமல்குமாரும் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர். தேடப்பட்டுவந்த சன்னாசியை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மில்லில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களை ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரவேண்டும் என்று கூறி வங்கிக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் கடன் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

மேலும், வங்கியின் நெருக்கடிக்கு பயந்தும், கடன் சுமையை அறிந்த பயத்திலும், மனஉளைச்சலிலும் விருதுநகர் பகுதியை சேர்ந்த சுமார் 15 பேர் கடந்த 6 மாதங்களில் இறந்துள்ளதாகவும், சிலர் வங்கிக்கு பயந்து தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெயரில் பெரியகுளம், தேனி, ஜெயமங்கலம், நிலக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை கடன் வாங்கி, சுமார் ரூ.200 கோடி மோசடி நடந்துள்ளது.

வங்கியில் இருந்து நோட்டீஸ் சென்ற பிறகே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் பெற்றுள்ள விவரம் தெரியவந்துள்ளது. கிட்டங்கிகளில் சுமார் 71 டன் தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக சான்றிதழ் பெற்று கடன் வாங்கி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் பலர் புகார் கொடுக்கவில்லை.

இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகளின் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story