மாநில செய்திகள்

128 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + The first Ministerial Medal for 128 persons

128 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

128 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, 128 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டும் வழங்கப்பட்டும் வருகின்றன.

மேலும் சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின்போது முதல்-அமைச்சர் அறிவித்ததையொட்டி, தடய அறிவியல் துறை அறிஞர்களுக்கும் இந்த ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல், முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும்;

சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும்; ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் பிரிவு தலைவர் வரையிலான 5 அலுவலர்களுக்கும்; விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும்;

தடய அறிவியல் துறையில் துணை இயக்குனர் ஒருவருக்கும் என மொத்தம் 128 பேருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் “மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர்களின் பதவிக்கு ஏற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும், வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவற்றை முதல்-அமைச்சர் வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.