திருப்பூரில் போலி சான்றிதழ் தயாரித்த 2 பெண்கள் கைது வக்கீல் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


திருப்பூரில் போலி சான்றிதழ் தயாரித்த 2 பெண்கள் கைது வக்கீல் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Oct 2018 9:30 PM GMT (Updated: 10 Oct 2018 8:27 PM GMT)

திருப்பூரில் போலி சான்றிதழ் தயாரித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் போலியாக சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூர் பாரதிநகரில் செயல்பட்டு வரும் ஒரு அழகு நிலையத்தில் போலி சான்றிதழ்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி வருவாய் துறையினர் ஏற்பாடு செய்திருந்த மணி என்பவர் அழகு நிலையத்தில் இருந்த மாசானவடிவு (வயது 37) என்ற பெண்ணை தொடர்பு கொண்டு கோர்ட்டில் ஜாமீன் பெறுவதற்கான சான்றிதழ் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஜாமீன் பெறுவதற்கான போலி முத்திரைகளுடன் கூடிய சான்றிதழை மாசானவடிவு தயாரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து மாசானவடிவை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அழகுநிலையம் நடத்தி வந்த மகேஸ்வரி (38) என்ற பெண் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

மேலும், அழகுநிலையத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கு பேரூராட்சி செயல் அதிகாரி, நிலஅளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகிய துறைகளின் பெயரில் போலி முத்திரைகள் கொண்ட சீல் கட்டைகள் இருந்தன.

ஜாமீன் பெறுவதற்கான மனு, பட்டா, வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளும் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இதில் ஒரு வக்கீல் மற்றும் இடைத்தரகர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

வக்கீல் தன்னிடம் ஜாமீன் பெற வருபவர்களை சான்றிதழுக்காக, மகேஸ்வரியிடம் பரிந்துரை செய்வார். சம்பந்தப்பட்ட நபர்கள் அழகுநிலையத்துக்கு சென்று வக்கீலின் பெயரை கூறி தேவையான சான்றிதழ்களை பெற்று சென்றுள்ளனர்.

இதன்படி ஜாமீன் பெறுவதற்கான சான்றிதழ் ஒன்றிற்கு ரூ.8 ஆயிரம் வரை வசூல் செய்ததாகவும் தெரிகிறது. தற்போது தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுவரை போலி சான்றிதழ்களை பெற்று கொண்ட நபர்கள் குறித்தும், போலி சான்றிதழ்களை எந்தெந்த விஷயங்களுக்காக பயன்படுத்தி உள்ளனர் என்பது குறித்தும் மகேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி போலி சான்றிதழ் தயாரிக்க தேவையான முத்திரைகள் அடங்கிய சீல் கட்டைகளை யார் இவர்களுக்கு தயாரித்து கொடுத்தது என்பது குறித்தும், பின்புலத்தில் அரசு அதிகாரிகள் யாரேனும் தொடர்பில் இருக்கின்றனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். நீண்டநாட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு செல்வார்கள்.

அவர்களை தொடர்பு கொள்ளும் இடைத்தரகர்கள் வடமாநிலத்தவர்களுக்கு தேவையான போலி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டைகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளனர்.

இதன்படி போலி ஆதார் அட்டை அச்சடிக்க ரூ.6 ஆயிரமும், போலி சான்றிதழ்கள் பெற ரூ.8 ஆயிரம் என தனித்தனியாக கட்டணம் நிர்ணயித்து வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலி சான்றிதழ்கள் உள்ளிட்டவைகள் தயாரித்து கொடுக்கும் பணியை பல ஆண்டுகளாக இந்த கும்பல் நடத்தி வந்துள்ளது. இதன்மூலம் பல லட்சம் மோசடி நடத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Next Story