டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை -ஓ.பன்னீர்செல்வம்


டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை -ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:15 PM GMT (Updated: 11 Oct 2018 9:49 PM GMT)

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வில் 1½ கோடி உறுப்பினர்கள் இருந்தார்கள் என்கிறீர்கள். ஆனால் அதில் 1.10 கோடி பேர் தான் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ளார்கள் என்றால், மீதம் உள்ள 40 லட்சம் பேர் என்ன ஆனார்கள்?

பதில் (ஓ.பன்னீர்செல்வம்):- ஜெயலலிதா இருந்த சமயத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக இருந்தது. அதில் 31 லட்சம் பேர் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, அம்மா பேரவையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தற்சமயம் இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் இருப்பவர்களுக்கு வயதாகிவிட்டதால், அந்த பிரிவில் உறுப்பினர் சேர்க்கை விரைவில் நடைபெறும். அந்த சமயம் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 கோடிக்கு மேல் உயரும்.

கேள்வி:- அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெறுவது எப்போது?

பதில் (ஓ.பன்னீர்செல்வம்):- முறைப்படியான அறிவிப்புடன் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெறும்.

கேள்வி:- அ.தி.மு.க.வில் மீண்டும் சேராத தொண்டர்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றுவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

பதில் (ஓ.பன்னீர்செல்வம்):- எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. எங்களிடம் தான் இருக்கிறது. தொண்டர்களும் எங்களுக்கு தான் ஆதரவாக இருக்கிறார்கள். மக்களும் எங்களுக்கு தான் ஆதரவாக இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த இயக்கம் வலுவானதாக என்றும் நிலைத்து நிற்கும்.

கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?

பதில் (ஓ.பன்னீர்செல்வம்):- சசிகலா, ஏற்கனவே கட்சியின் பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் இல்லை.

பதில் (கே.பி.முனுசாமி):- இது கட்சியின் புதிய உறுப்பினர் படிவ சேர்க்கை. நாங்கள் கட்சியின் புதிய உறுப்பினர் படிவத்தை பெற்றிருக்கிறோம். அதன்படி கட்சியில் நாங்கள் மீண்டும் புதிய உறுப்பினர்களாக ஆகியிருக்கிறோம். இதில் சேராதவர்கள் கட்சியில் இல்லாதவர்கள் ஆவார்கள். அந்தவகையில் சசிகலா புதிய உறுப்பினராக சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் கட்சியில் இல்லவே இல்லை.

கேள்வி:- டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் பிரபு, கலைசெல்வன், ரத்தின சபாபதி ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில் (ஓ.பன்னீர்செல்வம்):- முறையாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. உறுதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறதே?

பதில் (கே.பி.முனுசாமி):- டி.டி.வி.தினகரனுடன் சென்ற மிக சொற்பமான சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

பதில் (எடப்பாடி பழனிசாமி):- கட்சிக்கு துரோகம் விளைவித்தவர்களை நீக்கியிருக்கிறோம்.

மேற்கண்டவாறு அவர்கள் பதில் அளித்தனர்.

Next Story