அண்ணாநகர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்குமா?


அண்ணாநகர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்குமா?
x
தினத்தந்தி 14 Oct 2018 10:15 PM GMT (Updated: 14 Oct 2018 9:03 PM GMT)

சென்னை அண்ணாநகர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த பாதையில் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

சென்னை,

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக அண்ணாநகருக்கு 5 மின்சார ரெயில் சேவைகள் கடந்த 2003-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டன. இந்த ரெயில் சேவைகளை சென்னை கடற்கரை, பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் இருந்து அண்ணாநகர், பாடிக்கு செல்வதற்கும், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 2007-ம் ஆண்டு பாடி மேம்பாலத்துக்கான கட்டுமான பணியின்போது, தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக அண்ணாநகர், பாடி ஆகிய 2 ரெயில் நிலையங்களும் மூடப்பட்டன.

மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்பும் மூடப்பட்ட அந்த 2 ரெயில் நிலையங்களும் மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. போதிய அளவில் கூட்டம் இல்லை என்பதால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இதையடுத்து அண்ணா நகர், பாடி ரெயில் நிலையங்கள் பயன்பாடின்றி காட்சி பொருட்களாகின. பாழடைந்த நிலையில் புதர் மண்டின. சமூக விரோதிகளின் கூடாரமாக மாறின. ரெயில் நிலையத்தில் இருந்த நாற்காலிகள், விளக்குகள், குடிநீர் குழாய்கள் திருட்டு போயின.

ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் புதிய ரெயில் பெட்டிகள் அண்ணாநகர் ரெயில் நிலையம் வழியாக சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. எனவே அண்ணாநகர் ரெயில் நிலையம் தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்து ஐ.சி.எப்.-ன் கட்டுப்பாட்டுக்கு மாறிவிட்டது. தற்போது அங்கு பல்வேறு பராமரிப்பு பணிகளை ஐ.சி.எப். எடுத்து வருகிறது.

அந்தவகையில் ரெயில் நிலையத்துக்குள் வெளி ஆட்கள் வராத வகையில் சுற்றுச்சுவர்கள் புதிதாக எழுப்பப்பட்டு, சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அங்கு தண்டவாள மின்பாதையை சீரமைக்கும் பணிகளும் வேகமாக நடக்கின்றன.

இதேபோல், பாழடைந்து கிடக்கும் பாடி ரெயில் நிலையத்தையும் பராமரித்து அண்ணாநகர் ரெயில் நிலையம் வழியாக இந்த வழித்தடத்தில் பயணிகள் ரெயில் சேவையை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story