தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’
x
தினத்தந்தி 16 Oct 2018 12:00 AM GMT (Updated: 15 Oct 2018 11:21 PM GMT)

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் 70½ லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதனை செயல்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அதன்படி மாணவர்களுக்கான ‘ஸ்மார்ட் கார்டில்’ உள்ள ‘க்யூ ஆர் கோடு’ அல்லது ‘பார் கோடு’ வாயிலாக மாணவர் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் பொது தொகுப்பில் இருந்து இணையதளத்தின் வாயிலாக பெற முடியும்.

மேலும் ‘ஸ்மார்ட் கார்டு’ அடிப்படையில் மாணவர்கள் பள்ளி நேரங்களில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் இருக்கும் சூழலில் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை கண்டறிய இயலும். மாணவர்களின் ரத்தப்பிரிவு சார்ந்த விவரம் அதில் இருப்பதால் மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும்போது அந்த மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு பெரிதும் உதவும்

மாணவர்கள் ‘ஸ்மார்ட் கார்டை’ அணியும்போது தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக தங்களை உணர்கிற வாய்ப்பு ஏற்படும். மாணவர்களின் இடை நிற்றலை துல்லியமாக கண்டறிய முடியும்.

மேலும் பள்ளிக்கல்வி இயக்குனர் அரசு துறையின் கீழ் உள்ள 37 ஆயிரத்து 358 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 மாணவர்களுக்கும், 8 ஆயிரத்து 386 அரசு உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 17 மாணவர்களுக்கும் என மொத்தம் 70 லட்சத்து 59 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பெயர், மாணவர்களின் அடையாள அட்டை எண், பிறந்த தேதி, தந்தையின் பெயர், முழு முகவரி, பள்ளியின் பெயர், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்பட்ட ஆண்டு, மாணவரின் புகைப்படம், ரத்தப்பிரிவு, கல்வித்தகவல் மேலாண்மையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களுடன் ‘பார் கோடு’ அல்லது ‘க்யூ ஆர் கோடு’ ஆகியவை இடம்பெறும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுய விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை அமைப்பில் உள்ளடு செய்யப்பட்டு உள்ளது என்றும், மாணவர்களின் சுய விவரங்கள் அடங்கிய மென்பொருள் பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தயாரித்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கவும், இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 அனுமதித்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கருத்துரு அனுப்பியுள்ளார்.

அதனை கவனமுடன் பரிசீலித்து ஏற்க அரசு முடிவு செய்து ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரத்து 676 வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் உரிய ஒப்பந்த விதிமுறைகளை கடைபிடித்து ‘ஸ்மார்ட் கார்டு’ தயாரிக்கும் பணியை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Next Story