முதல் அமைச்சர் பழனிசாமியுடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை


முதல் அமைச்சர் பழனிசாமியுடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை
x
தினத்தந்தி 25 Oct 2018 4:06 AM GMT (Updated: 25 Oct 2018 4:06 AM GMT)

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில், முதல் அமைச்சருடன் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்திவருகிறார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தனி அணியாக செயல்பட்டு வரும் டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆதரவு அளித்தனர். அவர்கள் தமிழக கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அவருக்கு பதில் வேறு ஒருவரை முதல்-அமைச்சராக நியமிக்கவேண்டும் என்றும் மனு ஒன்றை கொடுத்தனர்.

இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து 3-வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சத்திய நாராயணன் வழக்கு விசாரணையை நடத்தினார். வக்கீல்கள் வாதம் நிறைவு பெற்றதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்தநிலையில் நீதிபதி சத்திய நாராயணன் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார்.

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  முதல் அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற  இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 

Next Story