தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீசுக்கு தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு


தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீசுக்கு தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Oct 2018 9:45 PM GMT (Updated: 25 Oct 2018 8:29 PM GMT)

மாணவி சோபியா தந்தை தொடர்ந்த வழக்கில், தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என போலீசுக்கு தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது.

தூத்துக்குடி

ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது, சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரின்பேரில் சோபியா மீது புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதேபோன்று சோபியாவின் தந்தை சாமி, பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் 10 பேர் சேர்ந்து தன்னையும், மகளையும் மிரட்டியதாக புகார் கொடுத்தார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது.

வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

இந்தநிலையில் சாமி தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த மாதம் 3-ந் தேதி பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது நான் அளித்த புகார் மனு மீது இதுவரை போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆகையால் அந்த மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி, பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவருடைய தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டார். இந்த விசாரணை அறிக்கையை 20-11-18 அன்று கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும் அவர் கூறினார்.

Next Story