டி.டி.வி.தினகரனை நம்பி சென்ற ‘18 எம்.எல்.ஏ.க்களுக்கும் திருநெல்வேலி ‘அல்வா’ கொடுத்து விட்டார்’ அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி


டி.டி.வி.தினகரனை நம்பி சென்ற ‘18 எம்.எல்.ஏ.க்களுக்கும் திருநெல்வேலி ‘அல்வா’ கொடுத்து விட்டார்’ அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2018 11:30 PM GMT (Updated: 30 Oct 2018 10:59 PM GMT)

‘டி.டி.வி.தினகரனை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அவர் திருநெல்வேலி ‘அல்வா’ கொடுத்துவிட்டார்’ என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை நந்தனத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசியமும், தெய்வீகமும் ஒருங்கே பெற்ற தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவம் அமைத்தபோது, பெரும்பாலான தமிழர்களை அனுப்பி இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். அவரது வீரத்தையும், விவேகத்தையும் போற்றும் வகையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் முழு உருவச்சிலைக்கு தங்க கவசம் அணிவித்து, ஆண்டுதோறும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம்.

டி.டி.வி.தினகரனை பொறுத்தவரை அவர் ஒரு மண்குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கிய 18 எம்.எல்.ஏ.க்கள் இன்று பரிதாப நிலைக்கு வந்துள்ளனர். அவர்களுக்காக நாங்கள் உண்மையிலேயே மிகவும் வருத்தப்படுகின்றோம்.

18 எம்.எல்.ஏ.க்களுக்கும் டி.டி.வி.தினகரன் திருநெல்வேலி அல்வா கொடுத்துவிட்டார். டி.டி.வி.தினகரனை பொறுத்தவரையில் தமிழக அரசியலில் எடுபடாத நபராக இருக்கிறார். எனவே நாங்கள் அவரைப்பற்றி எந்த விதத்திலும் கவலைப்படுவதாக இல்லை.

‘மறப்போம், மன்னிப்போம்’ என்று அண்ணா கூறுவது வழக்கம். அந்த வகையில், நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். எங்களை பொறுத்த வரையில், சசிகலா குடும்பத்தை தவிர வேறு யார் வேண்டுமானாலும் திரும்பி வந்தால், கட்சி அவர்களை சேர்த்துக்கொள்ளும். அவர் களை அன்போடும், பாசத்தோடும் அரவணைத்து காப்பாற்றுவோம்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மருந்து மாத்திரைகள் தமிழ்நாட்டில் அனைத்து ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய பின் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் தொன்மை காலம் தொட்டு தேசியமும், தெய்வீகமும் தான் ஆண்டுள்ளது. இது கலாசாரம் போற்றும் பூமி. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அனைவரும் பின்பற்ற வேண்டும். இனி தமிழகத்திற்கு தேசியமும், தெய்வீகமும் உள்ள கட்சியின் ஆட்சி தான் வரவேண்டும்” என்றார்.

நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறுகையில், “மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும்” என்றார்.

Next Story