குத்தகை நிலத்தை காலி செய்யுமாறு மிரட்டல் அமைச்சர் வீரமணி மீது ஐகோர்ட்டில் வழக்கு


குத்தகை நிலத்தை காலி செய்யுமாறு மிரட்டல் அமைச்சர் வீரமணி மீது ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 8 Nov 2018 11:30 PM GMT (Updated: 8 Nov 2018 10:40 PM GMT)

குத்தகை நிலத்தை காலி செய்யுமாறு மிரட்டுவதாக அமைச்சர் கே.சி.வீரமணி மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சென்னை,

வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வேலூரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். அந்த நிலத்தை சேகர்ரெட்டி ரூ.225 கோடிக்கு வாங்கி உள்ளதாகவும், நிலத்தை காலி செய்து கொடுக்க குத்தகைதாரர்களான எங்களுக்கு ரூ.65 கோடி தருவதாகவும் ஒப்புக்கொண்டனர். அதன்படி ரூ.19 கோடியை காசோலையாக வழங்கவும், மீதி தொகையை ரொக்கமாக தரவும் சேகர்ரெட்டி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால் ஒப்புக்கொண்டபடி எங்களுக்கான தொகையை வழங்கவில்லை. தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தூண்டுதலின்படி போலீசாரை வைத்து எங்களை அந்த நிலத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த நில விற்பனை முடிந்தால் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால், அந்த இடத்தை காலி செய்து கொடுக்க எங்களுக்கு பல்வேறு வழிகளில் மிரட்டல் வருகின்றன.

இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஜி.பி., சட்டசபை செயலாளர், அரசு தலைமை கொறடா ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை செயலாளர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும். ஒருவேளை அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த புகார் தொடர்பாக சட்டப்படி அமைச்சர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த மனுவிற்கு அரசு தரப்பில் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Next Story