கஜா புயலால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்


கஜா புயலால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:15 AM GMT (Updated: 17 Nov 2018 10:15 AM GMT)

கஜா புயலால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

வங்க கடலில் கடந்த 11-ந் தேதி உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த கஜா புயல், நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட சற்று தாமதமாக தரைப்பகுதியை நெருங்கிய புயலின் கண் பகுதி (மைய பகுதி) நள்ளிரவு 12.30 மணி அளவில் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது.

26 கிலோ மீட்டர் நீளமும், 20 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட கஜா புயலின் கண் பகுதி கரையை கடக்க 2 மணி நேரம் ஆனது.  கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுவிட்டது.

இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மக்களுக்கு நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கஜா புயல் வரும் என மத்திய அரசு எச்சரித்திருந்ததால் ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தானே, வர்தா, ஓகி வரிசையில் #CycloneGaja பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன். அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை! என பதிவிட்டுள்ளார்.

Next Story