மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுகிறது: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + The atmosphere changes into the lower zone 2 days in Tamilnadu Heavy rainfall Weather Research Center Information

காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுகிறது: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுகிறது: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 18-ந்தேதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருப்பதாகவும், அது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) அது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும்.

பின்னர் மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை. அதிகபட்சமாக தாழ்வு மண்டலமாகவே தமிழக பகுதிகளை கடந்து செல்லும்.

இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். குறிப்பாக தமிழகத்தில் காஞ்சீபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடைவெளிவிட்டு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 21-ந்தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

வடகிழக்கு பருவமழை தள்ளிப்போகுமா? என்று அவரிடம் கேட்டதற்கு, ‘வடகிழக்கு பருவமழை அக்டோபர்-டிசம்பர் வரை என்பது கணக்கீட்டுக்காக நிர்ணயிக்கப்பட்டது. சில நேரத்தில் ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை கூட தள்ளிப்போகும். காற்றின்போக்கு, உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவற்றை கொண்டு தான் வடகிழக்கு பருவமழையை கணக்கிட முடியும்’ என்றார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

செங்கோட்டை 8 செ.மீ., மணிமுத்தாறு 6 செ.மீ., பாம்பன், பாபநாசம், திருச்செந்தூர், ராமேசுவரம் தலா 5 செ.மீ., தென்காசி, அரிமளம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை தலா 4 செ.மீ., கொடுமுடி, ஆய்க்குடி, திருவாரூர், அம்பாசமுத்திரம், ராதாபுரம், பரமக்குடி, மங்களபுரம் தலா 3 செ.மீ., திருமயம், கோவில்பட்டி, பேரையூர், பழனி, மதுராந்தகம், மணமேல்குடி, கும்பகோணம், திண்டுக்கல், இலுப்பூர், திண்டிவனம், மூலனூர், தரங்கம்பாடி, இளையான்குடி தலா 2 செ.மீ. மற்றும் பல்வேறு இடங்களில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...