வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த தடை கோரி வழக்கு போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த தடை கோரி வழக்கு போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2018 2:27 AM IST (Updated: 5 Dec 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

வள்ளுவர் கோட்டம் லேக் ஏரியா குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

வள்ளுவர் கோட்டம்

நுங்கம்பாக்கம் பகுதியில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் 5 முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம் உள்ளது. இந்த பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் தான் அதிகமாக உள்ளன. 4-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. வள்ளுவர் கோட்டத்தின் ஐந்து முனை சந்திப்பு சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் தியாகராய நகரை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குகிறது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தும் இடமாக போலீசார் அறிவித்து, போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்குகின்றனர்.

துயரங்கள்

அரசியல் கட்சியினர், சமூகநல அமைப்புகள், சாதி சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இப்பகுதியில் போராட்டம், தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறோம்.

முக்கியமாக வள்ளுவர் கோட்டம் பகுதியில் குவியும் கூட்டம் மற்றும் வாகனங்களால் குடியிருப்பு வாசிகள் தங்களின் வீடுகளுக்குக்கூட செல்ல முடிவதில்லை. சம்பந்தமில்லாமல் இப்பகுதியில் கூடும் சில இளைஞர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவியரை கேலி செய்யும் நிலைமையும் உள்ளது. இடைவிடாது நடத்தப்படும் போராட்டங்களால் ஒலிபெருக்கி இரைச்சல் பாதிப்பு இப்பகுதியில் அதிகமாக உள்ளது. வள்ளுவர் கோட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளும் சிரமமடைகின்றனர்.

ஆபாசமாக திட்டுகின்றனர்

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க அழைத்துவரப்படும் பெண்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீர் கேட்பதுடன், இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறைகளுக்கும் அனுமதி கோருகின்றனர். அனுமதி தரமறுத்தால் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், காயிதே மில்லத் மணிமண்டபம், திருவொற்றியூர், மாதவரம், சேத்துப்பட்டு, தாம்பரம், ஆவடி, மடிப்பாக்கம் பல்லாவரம் என மொத்தம் 26 இடங்களை அரசியல் நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திக்கொள்ள போலீசார் அனுமதிக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளனர்.

தடை வேண்டும்

ஆனால் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் பகுதியில்தான் அனைத்து தரப்பினரும் தங்களது கோரிக்கை நிறைவேறும் இடமாக வைத்துள்ளனர். எனவே வள்ளுவர் கோட்டம் பகுதியில் எந்தவொரு போராட்டத்தை மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், ‘இந்த வழக்கிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் பதில் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

விசாரணையை வருகிற ஜனவரி 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story