தொண்டர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமி கடிதம்


தொண்டர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 17 Jan 2019 12:00 AM GMT (Updated: 17 Jan 2019 12:00 AM GMT)

எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்கள் என்று தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை,

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆருக்கு 102-வது பிறந்த நாள் விழா... இந்த நாளை தமிழ் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். மிகச் சிறந்த மாமனிதர். மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து நேசிக்கின்ற பேருள்ளம் அவருக்கு இருந்தது. தீயசக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத்தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று அ.தி.மு.க.விற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவர் எம்.ஜி.ஆர்.

அ.தி.மு.க. ஆட்சி ஏழை, எளியோரின் வேதனைகளைத் தீர்க்கின்ற ஆட்சி. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை தமிழ் நாட்டின் வீர வரலாறாக, எவராலும் வீழ்த்த முடியாத வெற்றி வரலாறாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் நாடே புகழும் வெற்றியைத் தேடித் தந்து, அ.தி.மு.க.வை இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய இயக்கம் என்ற புகழைப் பெற்றுத் தந்து, சட்டமன்றத் தேர்தலில் ஒரு முறை ஆண்ட கட்சி, தொடர்ந்து மறு முறையும் அரியணையில் ஏறியதில்லை என்ற 32 வருட அரசியல் வரலாற்றை உடைத்தவர். அவரது வழியில் அ.தி.மு.க.வை எவராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டை என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.

ஜெயலலிதா செயல்படுத்தி வந்த நலத் திட்டங்களோடு, புதிய புதிய திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் பொங்கல் எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. நாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள். அதனால் தான் நாமும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும், கெடுத்துப் பழக்கப்பட்டவர்களுக்கும் அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. யார் தடை போட்டாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நாம் பாடுபடுவோம்.

எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப் பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவதூறுச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; உண்மைக்குப் புறம்பாக உளறிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி தான் என்பதை உண்மையாக்கி காட்ட வேண்டும்.

தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. மட்டுமே என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நம் கண் முன்னே நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் என்ற களம் தெரிகிறது. எந்தத்தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூடுவோம். அதற்காக அனைவரும், அயராது உழைப்போம். ஒற்றுமையோடு ஓயாது உழைப்போம்.

இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story