எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயம் 102-வது பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்


எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயம் 102-வது பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
x
தினத்தந்தி 17 Jan 2019 11:30 PM GMT (Updated: 17 Jan 2019 10:40 PM GMT)

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டியில் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை,

தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நடந்தது. அந்தவகையில் சென்னை, கிண்டி, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அவருடைய உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார். அவரை, துணைவேந்தர் சுதா ஷேசய்யன் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார்.

பின்னர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சிலை அருகில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விழாவில் முக்கிய நிகழ்வாக எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவாக எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த ரூ.100 மற்றும் ரூ.5 சிறப்பு நாணயத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மேடையில் இருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் சிறப்பு நாணயம் வழங்கப்பட்டது. அதனுடன் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய நிதி அமைச்சகம் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்து ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை வெளியிட்டுள்ளது. இந்த நாணயங்களில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் ‘1917-2017’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோன்று எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவத்துடன் ரூ.100 மற்றும் ரூ.10 நாணயங்கள் வெளிவர உள்ளன.

இந்தியாவில் ரூ.100 நாணயங்கள் முதல்முறையாக இனிதான் புழக்கத்துக்கு வர இருக்கிறது. அந்த நாணயங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உருவங்கள் முதன்முதலாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. புதிய நாணயங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தான் முடிவு செய்யும். விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நாணயங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story