‘ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது’ ஆர்.எம்.வீரப்பன் பேட்டி


‘ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது’ ஆர்.எம்.வீரப்பன் பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2019 7:30 PM GMT (Updated: 18 Jan 2019 7:22 PM GMT)

ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மஹால் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.ராமலிங்கம், மகளிர் அணி செயலாளர் இரா.அபிராமி, மாநில அமைப்பு செயலாளர்கள் என்.ஜி.கலைவாணன், சு.ப.தமிழ்வேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பனின் மகன் செல்வம், மாவட்ட செயலாளர்கள் பெரம்பூர் துரைராஜ், கே.எம்.ஆறுமுகம், சங்கரலிங்கம், பெ.சிவகுமார், சேவியர், கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் கருணாகரன், மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஆர்.பி.வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. என்பது, நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஆரம்பித்த இயக்கம். எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது, வீடியோ காட்சிகளை படம் எடுத்து தமிழகத்தில் பரப்பி தான் அவரை 3-வது முறை முதல்-அமைச்சராக ஆக்கினோம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா அந்த இயக்கத்தை கைப்பற்றினார். அவர் ஆட்சி செய்த போதுதான், தமிழக மக்களுக்காக பாடுபட்ட ஒரு அரசு, ஒரு இயக்கம் பணம் சம்பாதிக்கிற வியாபாரக் கூட்டமாக மாறியது. அது ஜெயலலிதா மறைந்த பிறகும் இன்றும் தொடர்கிறது.

எம்.ஜி.ஆர். கழகம் என்பது ஒரு அரசியல் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். கழக தொண்டர்கள் பாடுபடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் யாராவது போட்டியிடுவர்களா? என்பதை இப்போது சொல்ல முடியாது.

ரஜினிகாந்த் எனக்கு மிக வேண்டிய, நெருங்கிய நண்பர். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் ரஜினி பேசியதில் ஜெயலலிதா கோபப்பட்டு என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். இன்றைக்கும் ரஜினிகாந்த் மிகப்பெரிய படங்களில் நடித்தாலும், பாட்ஷா என்று சொன்னால் அவருக்கு தனி புகழ் இருக்கிறது.

அப்போது தான் ரஜினி என்னோடு சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றெல்லாம் கூறினார்கள். அப்போது அவரை அரசியலுக்குள் வரவிடாமல் தடுத்தவர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மிகச் சிறந்த நடிகர். பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடுபவர். ஆனால், ஒரு நிலையான அரசியல் கட்சியை நடத்துவது அவரால் முடியுமா? என்றால் எனக்கு சந்தேகம். ஏன் என்றால் நான் பல நேரம் அவரோடு விவாதித்து இருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். சிந்தனையாளர். ஆன்மிக உணர்வு மிகுந்தவர். எதிர்பாராத வகையில் இயற்கையாகவே தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் நடிகர். அவரது அரசியல் நிலைமைகளை பற்றி கூற தயாராக இல்லை.

எம்.ஜி.ஆர். போன்று அரசியல் உலகத்திலும், கலை உலகத்திலும் புகழ் பெற்ற மனிதரை இந்தியா கண்டது இல்லை. இப்போது இருப்பது அ.தி.மு.க.வே இல்லை. அ.தி.மு.க. என்று எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிற ஒரு பெரிய கூட்டுக்கம்பெனி தான் இருக்கிறது. அவர்களுக்கு அரசியலை பற்றி கவலை இல்லை. மக்களை பற்றி கவலை இல்லை. தனது பதவி காப்பாற்றப்பட வேண்டும். தன் பதவியின் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story