அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை ரூ.20 ஆயிரம் கோடியில் 11 புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி


அமைச்சரவை கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை ரூ.20 ஆயிரம் கோடியில் 11 புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 18 Jan 2019 11:45 PM GMT (Updated: 18 Jan 2019 9:38 PM GMT)

3 மணி நேரம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் 11 தொழிற்சாலைகளை புதிதாக தொடங்கவும் அனுமதியளிக்கப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் 23, 24-ந் தேதிகளில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

கடந்த மாதம் 24-ந் தேதி மற்றும் கடந்த 3-ந் தேதிகளில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த மாநாடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டாளர்கள் அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள், சலுகைகள் குறித்து ஆராயப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க 30 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்றும் அரசு கருதுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நேற்று தமிழக அமைச்சரவை மீண்டும் கூடியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10.10 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் துறை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் மதியம் 1.20 மணிக்கு முடிவடைந்தது. கூட்டத்தில், நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், 11 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதலாக முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும், வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தள பரப்பளவு குறியீட்டினை 1.5-ல் இருந்து 2 ஆக உயர்த்த வரைவு விதிகளில் மாற்றம் கொண்டுவரவும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிட பாதுகாப்பை உறுதி செய்யவும், விதிமீறல்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அவற்றை தவிர்க்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்த, தற்போது தனியாக உள்ள திட்ட அனுமதி மற்றும் கட்டிட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் விண்ணப்பிக்கும் முறைகள் எளிமையாக்கப்பட்டு விரைவில் அனுமதி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்திக்கான புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 2 கொள்கைகளும் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட இருக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீண்டும் பயிற்சி மையங்களை தொடங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில், சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2019-2020-ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஏற்கனவே 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ.63 ஆயிரம் கோடி அளவுக்கே முதலீடுகள் வந்துள்ளதாக தெரிகிறது. புதிய தொழில் நிறுவனங்களின் வருகை பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான திட்ட காலமும் 3 முதல் 7 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் எதிர்பார்த்த முதலீடு கிடைக்கும் என்றும் அரசு நம்புகிறது.

இப்போது நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கவும் அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து, இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்தது. அதன்பிறகு, தலைமைச் செயலாளர் உள்பட அரசு உயர் அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்ற பின்னர், அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விரைவில் பூத் கமிட்டியை அமைக்க, அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story