மாநில செய்திகள்

ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார் + "||" + Military logistics production line The federal minister Nirmala Seetharaman started

ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்

ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்
சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 நகரங்களை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.3,038 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
திருச்சி,

இந்தியாவில் தொழில் துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, உத்தரபிரதேச மாநிலம் அலிகாரிலும், தமிழகத்திலும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் (‘காரிடார்’) அமைக்கப்படும் என்று அறிவித்தார். தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி இந்த நகரங்களையொட்டி நெடுஞ்சாலைகளில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தனியார் துறையினரும் பங்கு கொள்ள மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது.

அலிகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த வழித்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை நகரங்களை இணைக்கும் வகையிலான ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தின் தொடக்க விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை தொடங்கிவைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ராணுவ அமைச்சக அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

நேற்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ரூ.3,038 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

இதில் பொதுத்துறை நிறுவனமான ராணுவ தளவாட தொழிற்சாலை வாரியம் ரூ.2,305 கோடியும், பாரத் மின்னணு நிறுவனம் ரூ.140 கோடியே 50 லட்சமும், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.150 கோடியும் முதலீடு செய்கின்றன.

தனியார் நிறுவனங்களான டி.வி.எஸ் ரூ.50 கோடியும், டேட்டா பேட்டன்ஸ் ரூ.75 கோடியும், ஆல்பா டிசைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடியும் முதலீடு செய்கின்றன. சர்வதேச அளவில் ராணுவ தளவாட உற்பத்தியில் சிறந்து விளங்கும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் இந்த வழித்தடத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளது.

விழாவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் மத்திய அரசிடம் கேட்ட திட்டங்களை பிரதமர் மோடி இப்போது நிறைவேற்றி வருகிறார். ஒவ்வொரு திட்டத்தையும் மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நாங்கள் (பா.ஜ.க.) செயல்படுத்துகிறோம்.

இந்த ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடத்தை கேரள மாநிலம் பாலக்காடு வரை நீடிக்க வேண்டும் என்று உள்ளூர் தொழில்துறையினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இந்த வழித்தடம் தற்போதைக்கு சென்னை, திருச்சி, சேலம், ஓசூர், கோவை ஆகிய 5 நகரங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்.

இந்த வழித்தடம் இந்த பகுதியில் ராணுவ தளவாட உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதோடு, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.

திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையை மூடிவிடப்போவதாக சிலர் பிரசாரம் செய்கின்றனர். திருச்சி, ஆவடி யில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை. இதேபோல் ஊழியர்களை வேலைநீக்கம் செய்யப்போவதாக பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். அதிலும் உண்மை இல்லை.

பாதுகாப்பு துறையில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களை தமிழக அரசு முறையாக அணுகி ஒரு குழு அமைத்து அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தேவை இல்லை. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். எந்தவொரு பொதுநல திட்டத்துக்கும் மத்திய அரசு இடையூறாக இருக்காது. இவ்வாறு நிர்மலா சீதா ராமன் கூறினார்.

விழாவில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரான நவீன ரக துப்பாக்கி மற்றும் உபகரணங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதேபோல் புதிதாக தயாராக உள்ள ராணுவ தளவாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ராணுவ துப்பாக்கிகள், மாதிரி பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன.

விழாவில், கோவையில் உள்ள கொடிசியாவில் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு துறைக்கான புதிய கண்டு பிடிப்பு மற்றும் வளர்ச்சி மைய திட்டத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...