ஆசிரியர்கள் வராததால் மாணவர்களே படித்தனர்: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு


ஆசிரியர்கள் வராததால் மாணவர்களே படித்தனர்: அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது; பணிகள் பாதிப்பு இன்று முதல் மறியலில் ஈடுபட முடிவு
x
தினத்தந்தி 23 Jan 2019 12:00 AM GMT (Updated: 22 Jan 2019 9:58 PM GMT)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

சென்னை,

ஆசிரியர்கள் வராததால் மாணவர்களே படித்தனர். இன்று (புதன்கிழமை) முதல் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 51 ஆசிரியர் சங்கங்கள், 114 அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். வேலைநிறுத்தத்தோடு கூடிய ஆர்ப்பாட்டத்தை நேற்று முன்னெடுத்து சென்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, சங்கரபெருமாள், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜெ.காந்திராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு உடனடியாக முதல்-அமைச்சர், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்கிறோம். இதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்தாலும், அது நடக்கவில்லை. நீதிமன்றமும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து இருக்கிறது. இதை மகிழ்ச்சியாக பார்க்கிறோம்.

ஆகவே எங்களுடைய போராட்டம் 100 சதவீதம் நியாயமானது என்று நீதிமன்றமே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் எங்களுடைய போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எங்களுடைய போராட்டத்தை ஒடுக்க எத்தனிக்கிறார். அந்த ஒடுக்கு முறை, அடக்குமுறையை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் மூலம் சுக்குநூறாக உடைக்கும். தலைமை செயலாளரின் அறிவிப்பையும் மீறி 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள்.

நாளை (இன்று) முதல் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். அரசு எங்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை வென்று எடுக்காமல் வேலைநிறுத்தம் ஓயாது.

தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல், எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை ஏற்பது தான் ஒரே வழி. இந்த வேலைநிறுத்தத்துக்கு முழு காரணம் தமிழக அரசு தான். பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால், தலைமை செயலாளரின் அறிக்கையை ஒத்தி வைத்துவிட்டு, சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

பொதுத்தேர்வை சந்திக்க இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனைத்து பாடங்களை நடத்தி முடித்து, தேர்வுக்கு தயார் செய்துவிட்டார்கள்.

ஆகவே எங்களுடைய போராட்டத்தால் அவர்களுடைய படிப்பு வீணாகாது. எங்களுடைய அமைப்பில் உள்ள 165 சங்கங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 7 லட்சம் பேரும், ஆசிரியர்கள் 5 லட்சம் பேரும் இருக்கின்றனர். இவர்களில் 65 சதவீதம் முதல் 70 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் எழிலகம் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இதனால் அரசு துறை அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சில அலுவலகங்களில் முழுவதுமாக ஊழியர்கள் பணிக்கு வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் பலர் பணிக்கு வந்திருந்தனர். இதேபோல், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவான அளவிலேயே பணிக்கு வந்திருந்தனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் தாங்களாகவே படித்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று (புதன்கிழமை) முதல் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். சென்னையில் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி முன்பும், நாளை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும், நாளை மறுதினம் எழிலகம் முன்பும் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்து இருக்கின்றனர்.

Next Story