திருப்பூர்: காட்டு யானை சின்னதம்பியை பிடித்தது வனத்துறை


திருப்பூர்: காட்டு யானை சின்னதம்பியை பிடித்தது வனத்துறை
x
தினத்தந்தி 15 Feb 2019 6:45 AM GMT (Updated: 15 Feb 2019 6:45 AM GMT)

உடுமலை அருகே சுற்றித்திரிந்த சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்.

திருப்பூர், 

கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானை சின்னதம்பியை கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றி டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட சின்னதம்பி யானை பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக் குளம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

அங்கு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு தனக்கு தேவையான உணவை மட்டும் உண்டு, அங்கிருந்த ஒரு குட்டையில் தங்கியது. இதை அறிந்த வனத்துறையினர் கும்கி யானைகளை கொண்டு வந்து அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது அங்கிருந்து செல்ல மறுத்து கும்கி யானைகளுடன் நட்பாக பழகியது. இதனால் சின்னதம்பியை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெளியேறிய சின்னதம்பி அருகில் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து தஞ்சமடைந்தது. அங்கிருந்து அதை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. காரணம் காலையில் சிறிது நேரமும், மாலையில் சிறிது நேரமும் மட்டுமே சின்னதம்பி யானை வெளியே வந்துவிட்டு பின்னர் மீண்டும் அடர்ந்த கரும்பு தோட்டத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.

மேலும் கடந்த சில நாட்களாக கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்ற சின்னதம்பி யானை அங்கிருந்த தென்னை மரங்கள், வாழை மரங்கள் போன்றவற்றை வேரோடு சாய்த்து நாசம் செய்தது. இதனால் சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் உடனடியாக விரட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் வைக்கும் படியும், அதை கும்கியாக மாற்றுவதா? அல்லது வனப்பகுதியில் விடுவதா? என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கான ஆயத்த பணிகளை நேற்று காலை முதல் வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர்.  

இன்று காலை சின்னதம்பி யானைக்கு துப்பாக்கி மூலம் இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியுடன் சின்னதம்பி யானையை பிடித்தனர். பிடிபட்டுள்ள சின்னதம்பி யானையை வரகளியாறு முகாமில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

Next Story