நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் மு.க.ஸ்டாலின் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 9 March 2019 12:00 AM GMT (Updated: 2019-03-09T01:02:33+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆதரவு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. தி.மு.க. 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் என சரிபாதியாக போட்டியிட இருக்கின்றன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள், இயக்க தலைவர்கள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், எம்.ஜி.ஆர். கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம், இந்திய தேசிய லீக், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்ததும் வெளியே வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

காங்கிரஸ் கட்சியுடன் இன்று பேச்சு

கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எப்போது தொகுதிகள் ஒதுக்கப்படும்?.

பதில்:- காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் அதற்கான குழு அமைக்கப்படவில்லை. இன்று காலையில் கூட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் இதுகுறித்து போனில் பேசினேன். இன்று இரவுக்குள் அறிவிக்கப்பட இருக்கிறது. அறிவிக்கப்பட்டவுடன் நாளை (அதாவது இன்று) காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து இது சம்பந்தமாக பேச இருக்கிறார்கள். அவர்களிடம் பேசிய பிறகு, வரிசையாக, படிப்படியாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி இரண்டொரு நாளில் எந்தெந்த தொகுதிகள் என்பதை முறையாக அறிவிக்க இருக்கிறோம்.

கேள்வி:- தி.மு.க. வேட்பாளர் தேர்வில் புதியவர்களுக்கு வாய்ப்பு இருக்குமா?.

பதில்:- வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்போது கண்கூடாக உங்களுக்கு தெரியும்.

போலீஸ் பாதுகாப்பு எதற்கு?

கேள்வி:- தே.மு.தி.க. மீது திடீர் குற்றச்சாட்டு வைக்கப்படுவது சரிதானா?.

பதில்:- அதற்கு விளக்கம் சொல்ல நான் தயாராக இல்லை. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விளக்கமாக, துல்லியமாக, ஆதாரத்தோடு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். எனவே, அதைப்பற்றி பேசி என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. நீங்களும் அதுபற்றி பேசி உங்களுடைய தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம்.

கேள்வி:- காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டுள்ளார்களே?. சென்னையில் உள்ள வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதே?.

பதில்:- மீண்டும் தே.மு.தி.க. வினர் பேச வந்துவிடுவார் களோ என்று அதை தடுக்க அ.தி.மு.க.வினர் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறார்களோ என்னவோ.

தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

கேள்வி:- ரபேல் போர் விமானம் சம்மந்தமான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டது என்று சொல்லியிருக்கிறார்களே?.

பதில்:- ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவை எப்படி பாதுகாக்க போகிறார் என்பது தான் எங்களுடைய கேள்வி. அதற்காகத்தான் இப்படிப்பட்ட கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தலில் அவர்களை வீழ்த்த வியூகம் அமைத்துள்ளோம்.

கேள்வி:- தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும். தேர்தல் பிரசாரத்தை நீங்கள் எப்போது தொடங்குவீர்கள்?.

பதில்:- விருதுநகர் பொதுக் கூட்டத்திலேயே தேர்தல் பிரசாரத்தை நாங்கள் தொடங்கிவிட்டோம். அதுமட்டுமல்ல, 12,500-க்கும் மேற்பட்ட கிராமசபை கூட்டத்தின் மூலமாக எங்களுடைய பிரசாரத்தை நாங்கள் தொடங்கிவிட்டோம். அதனால், புதிதாக தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. தொகுதி உடன்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டு, வேட்பாளர் நேர்காணலை முடித்துக் கொண்டு, விரைவில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கூட்டணி கட்சிகளுக்கு போக மீதம் இருக்கின்ற 20 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை 2, 3 நாட்களில் நாங்கள் அறிவிப்போம். அதுமட்டுமல்ல, இந்த தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். வர வேண்டும். வருவதுதான் ஜனநாயக முறைப்படி நியாயமாக இருக்கும். ஆனால், அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியிலே இன்றைக்கு இருக்கக்கூடிய மாநில அரசும், மத்தியில் இருக்கக்கூடிய மோடி அரசும் ஈடுபட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது. அப்படி நடந்தால் ஜனநாயக படுகொலை. ஒரு வேளை தேர்தல் வந்தால், அந்தத் தேர்தலிலும் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story