நாடாளுமன்ற தேர்தல்: வருமான வரித்துறை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்கு, வருமான வரி புலனாய்வு இயக்குனரகம் சேவைகளை வழங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை,
வருமான வரித்துறை இணை இயக்குனரும், தேர்தல் செலவு கண்காணிப்பு அதிகாரியுமான எம்.முரளிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்கு, வருமான வரி புலனாய்வு இயக்குனரகம் சேவைகளை வழங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தல் செயல்பாடுகளில் கணக்கில் காட்டப்படாத பணம் பயன்படுத்தப்படாமல் கட்டுப்படுத்தி, தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு உதவி புரியவேண்டும் என்பதுதான் வருமான வரி புலனாய்வு இயக்குனரகத்தின் பங்கு ஆகும்.
இந்த நோக்கத்துக்காக கணக்கில் காட்டப்படாத பணம் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்து, பறிமுதல் செய்வதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரி புலனாய்வு இயக்குனரகம் எடுத்துள்ளது. அதன் ஒரு அங்கமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி புலனாய்வு இயக்குனரகம் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை வருமான வரித்துறை அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச தொலைபேசி எண், தொலைநகல் எண், இ-மெயில் முகவரி, வாட்ஸ்-அப் எண் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. யாரேனும் அதிகப்படியான தொகை அல்லது விலை உயர்ந்த பொருட்கள் வைத்திருந்தாலோ, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அதனை கொண்டு சென்றாலோ இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story