ராகுல் காந்தியை அமேதி தொகுதி மக்கள் நிராகரித்துவிட்டனர் - ஸ்மிருதி இரானி


ராகுல் காந்தியை அமேதி தொகுதி மக்கள் நிராகரித்துவிட்டனர் - ஸ்மிருதி இரானி
x
தினத்தந்தி 24 March 2019 11:08 AM GMT (Updated: 24 March 2019 11:08 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடுமாறு ராகுல் காந்தியை கேரள காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். கடந்த 2004–ம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் களமிறங்கி வரும் அவர், வருகிற தேர்தலிலும் அந்த தொகுதியிலேயே போட்டியிடுவதாக கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கூறப்பட்டு இருந்தது.

எனினும் ராகுல் காந்தி தென்னிந்தியாவின் ஒரு தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்பது தென் மாநிலங்களை சேர்ந்த காங்கிரசாரின் கோரிக்கையாக உள்ளது. அந்தவகையில் ராகுல் காந்தியை தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடச்செய்ய மாநில காங்கிரசார் விரும்பி கோரிக்கையும் வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என தெரிகிறது.

தற்போது கேரள மாநில காங்கிரசாரும் தங்கள் மாநிலத்துக்கு உட்பட்ட வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவ்வாறு ராகுல் காந்தி போட்டியிட்டால் தென் பிராந்தியத்தில் கட்சியின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர்கள், இது தொடர்பாக ராகுல் காந்தியையும் அணுகியுள்ளனர்.

குறிப்பாக, ராகுல் காந்தி சமீபத்தில் கேரளா சென்ற போது அவரிடம் இந்த கோரிக்கையை வைத்ததாக மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். இதைப்போல ராகுல் காந்தியை வயநாடு தொகுதியில் போட்டியிட அழைத்ததாக முன்னாள் முதல்–மந்திரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான உம்மன்சாண்டி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தகவலை மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும் உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதி கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக்குக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் மகிழ்ச்சியுடன் தொகுதியை விட்டுத்தர தயார் என அவர் கூறியுள்ளார்.

எனினும் கேரள காங்கிரசாரின் இந்த கோரிக்கை தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘ராகுல் காந்தி தங்கள் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என பல மாநிலங்களில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன. ஆனால் அமேதிதான் ராகுல் காந்தியின் கர்மபூமி’ என்று தெரிவித்தார்.

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு தோல்வி கிடைக்கும் என்ற அச்சத்திலேயே வயநாடு தொகுதியை காங்கிரசார் தேர்வு செய்திருப்பதாக பா.ஜனதா தலைவர் கும்மணம் ராஜசேகரன் கூறியுள்ளார். இதைப்போல, ‘ராகுல் காந்தியை கேரளாவில் போட்டியிட அழைப்பது பா.ஜனதாவை எதிர்ப்பதற்கா? அல்லது இடதுசாரிகளை எதிர்க்கவா? என்பதை காங்கிரசார் தெளிவுபடுத்த வேண்டும்’ என முதல்–மந்திரி பினராயி விஜயனும் கூறியுள்ளார்.

ஸ்மிருதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக போட்டியிடுகிறார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “அமேதி அவரை நிராகரித்துவிட்டது. பிற மாநிலங்களில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்படுவது அமேதி மக்கள் அவரை நிராகரித்துவிட்டனர் என்பதையே காட்டுகிறது,” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story