தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், தேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சேலம்,
பிரசார பொதுக்கூட்டம்
சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து சேலத்தில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி நிதின் கட்காரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நாமக்கல்லில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டம் நிறைவேற்றப்பட்டது? என்று கேள்வி கேட்டுள்ளார். நான் கேட்கிறேன், நீங்கள் சேலம் வழியாகத்தான் வந்திருப்பீர்கள். சேலத்தில் எவ்வளவு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலங்களே நாங்கள் செய்த சாதனைக்கு சாட்சியாக திகழ்கிறது.
ராணுவ தொழிற்சாலை
தி.மு.க. ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அது இப்போது விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பாலையில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன்மூலம் நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும். பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 வழங்கப்பட்டது. அதேபோல், தேர்தல் முடிந்தவுடன் ஏழை தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். நாங்கள் செய்த சாதனைகளை கூறவேண்டும் என்றால் ஒருநாள் போதாது.
அரசியல் வாழ்க்கை
மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம். இதன்மூலம் தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நீங்கி நாடு செழிக்கும். 83 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. இப்படி மக்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த தேர்தலோடு எனது அரசியல் வாழ்க்கை கிழிந்துவிடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். முதல்-அமைச்சர் பதவி நாற்காலியில் மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் அமரமுடியாது. இந்த தேர்தலுக்கு பிறகு தான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை தொடங்கும். ஆகவே நீங்கள் கண்ட கனவு ஒருபோதும் பலிக்காது. ஏற்கனவே கண்ட கனவு எல்லாம் கானல் நீராகிவிட்டது.
40 தொகுதிகளிலும் வெற்றி
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும், இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும், மே 19-ந் தேதி நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
மத்திய அரசு சாலை மேம்பாட்டிற்காக தமிழகத்துக்கு ரூ.2,500 கோடி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 39 மாநில சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த மத்திய மந்திரி நிதின் கட்காரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நான் இங்கு முதல்-அமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக பேசுகிறேன். நீங்கள் தந்தது இந்த முதல்-அமைச்சர் பதவி. சேலம் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்றால் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில் பிரசாரம்
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து ராயக்கோட்டை, மத்திகிரி, ஓசூர், சூளகிரி உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். அதனால் தான் நாம் மோடியை ஆதரிக்கிறோம். ராகுல்காந்தி, தான் பிரதமர் ஆனால் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கூறுகிறார். காவிரியை நம்பி தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உள்ளன. காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும். ராகுல்காந்தியின் இந்த பேச்சு தமிழக மக்களுக்கு எதிரானது.
பாடம் புகட்டுங்கள்
தி.மு.க. கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலுடன் தி.மு.க.வின் சகாப்தம் முடிவடைந்துவிடும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாநில திட்டங்களை அறிவித்துள்ளனர். நான் முதல்-அமைச்சராக இருக்கும்போது அவர்கள் எப்படி அந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்? இது ஒரு ஏமாற்று வேலை. இந்த தேர்தலின் மூலம் தி.மு.க.வின் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story