குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது


குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 27 April 2019 5:38 AM GMT (Updated: 27 April 2019 5:38 AM GMT)

குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் 3 பெண்களை ராசிபுரம் போலீஸ் கைது செய்தது.

நாமக்கல்,

பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரம் அமுதவள்ளி (வயது 50) தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். 

அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை பேரம் பேசி விற்ற நர்சு, கணவருடன் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   கொல்லிமலை பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. 

இந்த நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையை தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  ஏற்கனவே, இவ்விவகாரத்தில்  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story