நாளை "நீட்" தேர்வு : கட்டுப்பாடுகள் என்ன ?


நாளை நீட் தேர்வு : கட்டுப்பாடுகள் என்ன ?
x
தினத்தந்தி 4 May 2019 8:15 AM GMT (Updated: 4 May 2019 8:15 AM GMT)

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான "நீட்" தேர்வு, நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (நீட்) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான " நீட் " தேர்வு, நாளை (5-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு துவங்கி, மாலை 5 மணிக்கு நிறைவு பெறும்.  

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் நீட் தேர்வு மொத்தம் 154 நகரங்களில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை, திருவள்ளூர், கரூர், தஞ்சாவூர், நெல்லை, திருச்சி, சேலம், நாமக்கல் உள்பட 14 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட 11 மொழிகளில் எழுதலாம். தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் வந்தால் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். 1.30 மணிக்கு மேல் தேர்வு குறித்த நடைமுறைகளும், ஹால் டிக்கெட் பரிசீலனையும் நடக்கும்.

அந்த நேரத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டையும், புகைப்பட அடையாள அட்டையையும் தரவேண்டும். பிற்பகல் 1.45 மணிக்கு விடைத்தாள் வழங்கப்படும். 2 மணிக்குள் அதில் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் தேர்வு எழுதலாம். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

வாட்டர் பாட்டில்

* தேர்வு எழுத பால்பாயிண்ட் பேனா தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் கவர், கால்குலேட்டர், பேனா, அளவுகோல், எழுத பயன்படுத்தும் அட்டை, பென்டிரைவ், ரப்பர், எலக்ட்ரானிக் பேனா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

* செல்போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட் ஆகியவற்றை எடுத்து செல்லக்கூடாது.

* மணிபர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, வாட்ச், கை அணிகலன், கேமரா, அணிகலன்கள், சாப்பிடும் உணவுகள், வாட்டர் பாட்டில்களுக்கு அனுமதி கிடையாது.

முழுக்கை சட்டை கூடாது

* வெளிர் நிறத்திலான அரைக்கை ஆடைகள் அணிந்து வர வேண்டும். முழுக்கை ஆடைகள் அணிந்து வரக்கூடாது. கலாசாரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணிந்து வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 12.30 மணிக்குள் வந்து தெரிவிக்க வேண்டும்.

* செருப்புகள் மற்றும் குறைந்த உயரத்திலான (லோ ஹீல்ஸ்) செருப்புகள் அனுமதிக்கப்படும். ஷூக்கள் அணிந்து வரக்கூடாது.

மாணவர்கள் முழுகை சட்டை அணியக் கூடாது. இதேபோன்று, மாணவிகள் தலையில் கிளிப், மூக்குத்தி , காதுவளையம் அணிய கூடாது .

இந்த அறிவுறுத்தல்களை தேசிய தேர்வு முகமை கட்டாயமாக பின்பற்றி தேர்வு நல்ல முறையில் நடைபெற உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story