தி.மு.க. நிறம் மாறும் கட்சி மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு - தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்
தி.மு.க. நிறம் மாறும் கட்சி மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு - தமிழிசை சவுந்தரராஜன் பாய்ச்சல்
சென்னை,
தி.மு.க. ஒரு நிறம் மாறும் கட்சி என்றும், மு.க.ஸ்டாலினுக்கு பல முகங்கள் உண்டு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின்போது அரங்கேறிய வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தகர் அணி செயலாளர் சி.ராஜா, ஊடக பொறுப்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி நூதன முறையில் போராடினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
மம்தா பானர்ஜியின் அராஜகம்
மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேரணியின்போது திட்டமிட்டே அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி வன்முறையை கட்டவிழ்த்து உள்ளார். ‘சீப்பை ஒளித்துவிட்டால் திருமணத்தை நிறுத்திடலாம்’ என்று வடிவேலு பாணியில் மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொள்கிறார்.
மம்தா பானர்ஜி அரசியல் வன்முறையை தனது பாணியாக வைத்து அராஜகமாக செயல்படுகிறார். இதற்கான விலையை அவர் நிச்சயம் கொடுப்பார்.
கமல்ஹாசனை அப்புறப்படுத்துவார்கள்
அதேபோல இன்னொரு பக்கம் இந்துக்கள் மனம் புண்படும்படி கமல்ஹாசன் பேசினார். இப்போது, ‘யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆறிக்கொண்டு இருக்கும் காயத்தை மீண்டும் ரணப்படுத்தி பிரிவினைவாதத்தை தூண்டும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார்.
இதற்காக அவரது சட்டை கலையாமல் மக்கள் அவரை அப்புறப்படுத்துவார்கள். அரசியல் அனுபவமில்லாத அவர், முதலில் சலசலப்பு ஏற்படுத்துவதற்காக பேசுவார். விரைவில் சலித்துபோய் உட்காருவார்.
நிறம் மாறும் கட்சி
பா.ஜ.க.வுடன் நான் பேசியதை நிரூபிக்க தயாரா? என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுகிறார். மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கும் பல முகங்கள் உண்டு. தி.மு.க. ஒரு நிறம் மாறும் கட்சி. நான் நினைக்கும்போது அதனை நிரூபிப்பேன்.
அதேபோல இன்னொரு தலைவர் அழகிரியும் எந்த செய்தியையும் முழுதாக படிக்காமல் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை திருப்திபடுத்துவதற்காக பா.ஜ.க. மீதும், மோடி மீதும் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மு.க.ஸ்டாலினை, சந்திரசேகர ராவ் பார்த்ததில் இருந்தே பாவம் அவர் பீதியில் இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story