23-ந் தேதிக்கு பிறகு மோடி வீட்டுக்கு போவார்; ராகுல்காந்தி நாட்டை ஆள்வார் - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


23-ந் தேதிக்கு பிறகு மோடி வீட்டுக்கு போவார்; ராகுல்காந்தி நாட்டை ஆள்வார் - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 16 May 2019 5:07 AM IST (Updated: 16 May 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

“23-ந் தேதிக்கு பிறகு மோடி வீட்டுக்குப் போவார், ராகுல்காந்தி நாட்டை ஆள்வார்” என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

மதுரை, 

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் பிரசாரம் செய்தார். அதை தொடர்ந்து 2-வது கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்று காலை விரகனூர் கோழிமேடு பகுதியில் திரண்டிருந்த பெண்கள், தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, திண்ணை பிரசாரமும் செய்தார்.

புளியங்குளம் பகுதியில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு பலர் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய ஸ்டாலின், 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலைமான் அண்ணா மன்றம் அருகில் திரண்ட மக்கள் மத்தியிலும் பிரசாரம் செய்தார். பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து உரையாடினார்.

பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பல்வேறு சூழ்ச்சி

வருகிற 19-ந் தேதி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிறது. தி.மு.க. வேட்பாளர் சரவணனை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஏற்கனவே ஒரு தேர்தல் முடிந்து விட்டது. அது நாடாளுமன்ற தேர்தல். அந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை ஆதரித்து வாக்களித்தீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். குறிப்பாக மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று நீங்கள் வாக்களித்துள்ளர்கள்.

கடந்த திருப்பரங்குன்றம் தேர்தல் வேட்புமனுவில் அ.தி.மு.க.வினர் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியது போல் ஒரு நாடகத்தை நடத்தினர். அந்த தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அப்போது வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்திற்கு சென்றார். ஜெயலலிதாவின் கைரேகையை சுயநினைவோடு வாங்கவில்லை என்று தெரிவித்தார். அந்த வழக்கில், போஸ் இறந்த பிறகு தீர்ப்பு வந்தது. அது சரியான கைரேகை இல்லை. ஜெயலலிதா சுயநினைவோடு அந்த கைரேகையை வைக்கவில்லை. எனவே இந்த தேர்தல் செல்லாது. போஸ் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுகிறது என்று திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

ஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது அவரை ஏமாற்றி வேட்புமனு தாக்கல் செய்து ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இது தான் அந்த கட்சியின் லட்சணம். அந்த காரணத்தினால் தான் திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. எனவே நீங்கள் நாடாளுமன்ற தேர்தலின் போது எடுத்த முடிவை, இந்த தேர்தலிலும் எடுத்து தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஓட்டுகளை பெற...

கடந்த 5 ஆண்டில் 10 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ஒருவருக்கு கூட வேலை கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வங்கியில் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று சொன் னார். அதை செய்தாரா, செய்யவே இல்லை. உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் மோடிக்கு கவலை இல்லை.

புயலினால் பாதிக்கப்பட்ட நமது தமிழக மக்கள் இன்னும் சகஜமான நிலைக்கு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி தமிழக மக்களை சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இப்போது அவர் தமிழகத்திற்கு வருகிறார் என்று சொன்னால் ஓட்டுகளை பெறுவதற்கு மட்டுமே.

தூத்துக்குடி போராட்டம் 100-வது நாளை எட்டிய போது ஒரு பேரணி நடத்தினார்கள். அப்போது கலவரத்தை ஏற்படுத்தி அவர்களை காக்கை குருவிகளை சுட்டுத்தள்ளுவது போல் சுட்டுத்தள்ளியது இந்த அரசு. அதில் 13 பேர் இறந்து போனார்கள். அந்த சம்பவத்திற்கு ஒரு ஆறுதல் செய்தியோ, வருத்தமோ முதல்-அமைச்சரோ, பிரதமரோ தெரிவிக்கவில்லை. ஒரு துக்க செய்தி கூட அவர்கள் வெளியிடவில்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே குறிக்கோள் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான். நீங்கள் எப்படி பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து வாக்களித்து உள்ளர்களோ, அதே போல் எடப்பாடி பழனிசாமியையும் நிராகரிப்பதற்கு இந்த இடைத்தேர்தலில் வாக்களியுங்கள்.

ராகுல் காந்தி

ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் சட்டமன்றத்தில் போதுமான உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இனிமேல் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கப் போவது இல்லை. எனவே வருகிற 23-ந் தேதி தேர்தல் முடிவுக்கு பின்னர், தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

3 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்வதற்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இது சதி, சூழ்ச்சி என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அடுத்த அரை மணி நேரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி ஒரு தீர்மானம் வைத்தோம். 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிகிறபோது மோடி பிரதமராக இருக்கப் போவது இல்லை. அவர் வீட்டுக்குப் போவார். ராகுல் காந்தி தான் பிரதமராக நாட்டை ஆள்வார்.

எண்ணற்ற திட்டங்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தலைவர் கருணாநிதி செய்து கொடுத்தார். அவர் வழியிலே நாங்களும் நல்ல திட்டங்களை கொண்டு வருவோம். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து, குறைக்க உள்ளோம்.

தமிழ்மொழிக்கு செம்மொழி என உயரிய அந்தஸ்தை பெற்று தந்தவர் தலைவர் கருணாநிதி. அப்படிப்பட்ட தலைவர் மறைந்த பிறகு அவருக்கு 6 அடி இடம் கூட இந்த அரசு தர மறுத்தது. பின்னர் நீதிமன்றம் சென்றுதான் அவருக்கு அந்த 6 அடி இடத்தை பெற முடிந்தது. இதை எல்லாம் நினைவில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, சரவணனை அமோக வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story