கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு


கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
x
தினத்தந்தி 16 May 2019 7:27 AM GMT (Updated: 16 May 2019 7:27 AM GMT)

கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்று கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், “அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே.

நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன்” என்று கூறினார்.

அவரது இந்த  பேச்சுக்கு எதிராக 13க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  இந்த புகாருக்கு எதிராக அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு பின் நேற்று மதுரையின் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் மீண்டும் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றும் உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை என்றும் பேசினார்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனுவை ஏற்க நீதிபதிகள் இன்று மறுப்பு தெரிவித்தனர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.  அதனால் தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும்.  இந்த மனுவை நாங்கள் விசாரணை மேற்கொள்ள இயலாது என நீதிபதிகள் கூறிவிட்டனர்.

Next Story