அ.தி.மு.க., ஆட்சி முடிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது டி.டி.வி.தினகரன் பேட்டி


அ.தி.மு.க., ஆட்சி முடிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 7:50 PM GMT)

ஒரே ஒரு தொகுதியால் ஆட்சி தப்பியது என்றும், அ.தி.மு.க. ஆட்சி முடிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.

சென்னை, 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக(அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். ஒரே ஒரு தொகுதி கூடுதலாக கிடைத்ததன் மூலம் அ.தி.மு.க. ஆட்சி தப்பியது. அ.தி.மு.க. ஆட்சி முடிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். இதற்கான காரணம் போக போக தெரியும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அ.தி.மு.க. ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்போது யாரெல்லாம் ஸ்லீப்பர் செல் என்பது தெரியும்.

பலத்த சந்தேகம்

தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.வுக்கு ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. இது நம்பும்படியாக இல்லை. பொதுமக்கள், கட்சிக்காரர்கள் வாக்களிக்கவில்லை என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அ.ம.மு.க. ஏஜெண்டுகள் வாக்குப்பதிவு முடியும்வரை இருந்துள்ளனர். அவர்கள் கூடவா அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை.

இது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக அனைத்து விவரங்களையும் பெற்ற பின்னர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது குறித்து முடிவெடுப்போம்.

தி.மு.க.வுடன் மறைமுக கூட்டணியா?

தேர்தலின் போது தி.மு.க.வோடு மறைமுகமாக கூட்டணி வைத்திருந்ததாக கூறுவது தவறானது. யாரோ சிலர் கட்சியை விட்டு செல்வதால் அந்த கட்சி அழிந்துவிடும் என்று நினைப்பது தவறானது. எங்களை விட்டு பிரிந்து செல்பவர்களை பற்றி கவலைப்படவில்லை. உண்மையானவர்கள் எங்களோடு இருப்பது தான் எங்களுக்கு நல்லது.

வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் எங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறுபட மாட்டோம். ஒரே ஒரு தேர்தலை வைத்து கட்சியின் தலையெழுத்தை நிர்ணயிக்க முடியாது. எங்கள் கட்சி வலுவாகத்தான் உள்ளது. இன்னும் வலுப்படுத்துவோம். வருங்காலத்தில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story