மாநில செய்திகள்

விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை : தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + If the mistake of correcting the answer paper, the action will be taken: Madurai High court order to Tamil Nadu government

விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை : தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை : தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை, 

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடந்துள்ளதாகவும், லஞ்சம் வாங்கிக்கொண்டு பலருக்கு கூடுதல் மதிப்பெண் அளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உள்பட 10 பேர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடப்பது வழக்கமாகிவிட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன. விடைத்தாள் திருத்துவதில் தவறு நடந்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் தடுக்கவும் வேண்டும்.

கேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் போன்றவற்றில் மாநில அரசும், கல்வித்துறையும் இரட்டை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதில் தவறு நடந்தால் முழு நடைமுறையையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி தவறுகளை திருத்தவும், தவறுக்கான வாய்ப்புகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்த சூழ்நிலையில் குற்றச்சாட்டு குறிப்பாணையில் கோர்ட்டு தலையிட்டால் விசாரணை பாதிக்கப்படும்.

இதனால் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் தங்கள் மீதான விசாரணையை சந்தித்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மனுதாரர்கள் 2 வாரத்தில் குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு பதில் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.