மீண்டும் மீண்டும் அழைத்தால் குற்ற வழக்கில் சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள் : ஐகோர்ட்டு கருத்து


மீண்டும் மீண்டும் அழைத்தால் குற்ற வழக்கில் சாட்சி சொல்ல யாரும் வர மாட்டார்கள் :  ஐகோர்ட்டு கருத்து
x

எழும்பூர் கோர்ட்டில், குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் இருவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

சென்னை, 

‘எழும்பூர் கோர்ட்டில் எங்கள் மீதான வழக்கின், அரசு தரப்பு சாட்சியை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தோம். அதை மாஜிஸ்திரேட்டு ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்துவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று  அதில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கீழ் கோர்ட்டில் வழக்குகள் எப்படி விசாரிக்கப்படுகிறது? என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

அரசு தரப்பு முதல் சாட்சி கடந்த 2012-ம் ஆண்டு சாட்சியம் அளித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை மீண்டும் சாட்சி சொல்ல கூப்பிட்டால், கண்டிப்பாக ஞாபக மறதியில் முன்னுக்கு பின்னாக சாட்சி சொல்ல நேரிடலாம். இதை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாதகமாக்கி கொள்ளும்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கை வழக்கு விசாரணையை காலதாமதப்படுத்தும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நியாயமான, நேர்மையான, வெளிப்படையான விசாரணை கேட்க உரிமை உள்ளது. அதற்காக தங்கள் விருப்பம்போல் எல்லாம் சாட்சிகளை மீண்டும் மீண்டும் சாட்சி அளிக்க அழைக்க முடியாது. அப்படி செய்தால், எதிர்காலத்தில் குற்ற வழக்குகளில் யாரும் சாட்சியம் அளிக்க கோர்ட்டுக்கு வர மாட்டார்கள். எனவே, மாஜிஸ்திரேட்டு உத்தரவு சரியானது தான். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story