கோவையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மற்ற 3 பேர் கைது


கோவையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2019 11:01 AM GMT (Updated: 18 Jun 2019 11:01 AM GMT)

கோவையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை,

இலங்கையில் கடந்த ஏப்ரலில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கடந்த 12ந்தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அதன்பேரில் கடந்த 13ந்தேதி கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான்(வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன்(25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வருவது தெரிய வந்தது. போலீசாரின் சோதனையில் 3 பேரின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது, 3 பேரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது.  இதைத்தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வருகிற 28ந்தேதி வரை சிறையில் அடைக்க கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை கடந்த 15ந்தேதி நள்ளிரவு ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.  அவரிடம், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கோவையை சேர்ந்த மற்ற 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இவர்களிடம் நடந்த விசாரணையில், பொதுமக்கள் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் மீதும் மற்றும் கோவையில் உள்ள தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் பிற மத தலங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இவர்கள் 3 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு தீவிர ஆதரவாளர்களாக இருந்ததுடன், சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத குழுக்களின் கொள்கைகளை பரப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பின்னணியாக செயல்பட்டவர் என குற்றச்சாட்டு கூறப்படும் ஜஹரான் ஹசிம் என்பவருக்கு ஆதரவாளராகவும் இருந்துள்ளனர்.  அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.  அவர்களை வருகிற 28ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story