புதிய நிர்வாகிகள் 29-ந்தேதி அறிவிக்கப்படுகின்றனர் கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் டி.டி.வி.தினகரன் பேட்டி


புதிய நிர்வாகிகள் 29-ந்தேதி அறிவிக்கப்படுகின்றனர் கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 25 Jun 2019 11:15 PM GMT (Updated: 25 Jun 2019 11:10 PM GMT)

அ.ம.மு.க. கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் என்றும், புதிய நிர்வாகிகள் 29-ந்தேதி நியமிக்கப்படுவார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையே, தங்கதமிழ்செல்வனுக்கு டி.டி.வி.தினகரன் மீதும், அ.ம.மு.க. மீதும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆடியோ

இதனால் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் அவர் இணைய உள்ளதாகவும், இதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர்களை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனாலும் அவர் இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்தநிலையில், அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்கதமிழ்செல்வன் பேசியதாக சமூக வலைத்தளத்தில் வெளியான ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், உங்கள் அண்ணனை (டி.டி.வி.தினகரன்) இந்த மாதிரி அரசியல் செய்வதை நிறுத்த சொல் என்றும், நான் விசுவரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள் என்றும் தங்கதமிழ்செல்வன் ஆவேசமாக பேசுவதாக உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதுகுறித்து கருத்து தெரிவித்த தங்கதமிழ்செல்வன், சமூக வலைத்தளத்தில் என்னை விமர்சித்து கருத்துகள் வெளியாகி வருவது மனதுக்கு வேதனையை தருகிறது. என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குங்கள் என்று கூறியிருந்தார். இதற்கிடையே, அவருக்கு அ.ம.மு.க.வில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் டி.டி.வி.தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தங்கதமிழ்செல்வன் அதிருப்தியடைய காரணம் என்ன?, அவரை கட்சியில் வைத்திருக்கவேண்டுமா? அல்லது நீக்கவேண்டுமா?, பொறுப்புகளில் இருந்து தூக்கிவிடலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை நிர்வாகிகளிடம் டி.டி.வி.தினகரன் கேட்டதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை விடுத்தேன்

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. ஏற்கனவே திட்டமிட்டப்படி தான் இந்த கூட்டம் நடந்தது. சில தினங்களுக்கு முன்பு எப்.எம். ரேடியோவில் தங்கதமிழ்செல்வன் நேர்காணல் கொடுத்தது தொடர்பாக நிர்வாகிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர். அந்த ஆடியோவையும் எனக்கு நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். அதனை கேட்டுவிட்டு 20-ந்தேதி அவரை நேரில் அழைத்திருந்தேன். அப்போது வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம் என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தேன். அதற்கு கேள்விகளை தவறாக கேட்டார்கள் என்று கூறினார்.

மேலும், இனிமேல் தொலைக்காட்சிக்கு எல்லாம் பேட்டி கொடுத்தால் ஒழுங்காக கொடுக்கவேண்டும். இல்லை என்றால் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்புக்கும், மாவட்ட செயலாளர் பொறுப்புக்கும் வேறு ஒருவரை போடவேண்டிய நிலை வந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்தேன். மேலும் வேறு எங்கும் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் செல்லுங்கள் என்று அவரிடம் கூறினேன்.

பெட்டி பாம்பாக...

முதல் முறையாக நீக்கும் நடவடிக்கை வேண்டாம் என்று அதை தள்ளி வைத்தேனே தவிர, கட்சியில் இருந்து யாரையும் நீக்குவதற்கு அச்சமோ, பயமோ, தயக்கமோ எனக்கு இல்லை. தங்கதமிழ்செல்வன் விசுவரூபம் எல்லாம் எடுக்க மாட்டார். என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்.

யாரோ பின்னால் இருந்து அவருக்கு கட்டளையிடுகின்றனர் என்று தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்று அனைவருக்கும் தெரிந்துவிடும்.

நீக்கப்படுவார்

தங்கதமிழ்செல்வனை கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை தேர்வு செய்ய உள்ளோம். தேனி மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்யுங்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னை உடனடியாக அறிவிக்க சொன்னார்கள்.

இன்று (நேற்று) அஷ்டமியாக இருப்பதால் 29-ந்தேதி நான் மதுரைக்கு வரும்போது பேசி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறேன். இதேபோல கட்சியை பலப்படுத்தம் நடவடிக்கையாக தேர்தல் நேரத்தில் சரியாக செயல்படாத, நடவடிக்கைகள் சரியில்லாத மாவட்ட செயலாளர்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மாற்றப்படுவார்கள்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாகவும், சபாநாயகருக்கு எதிராகவும் தான் வாக்களிக்க முடியும். ஏனென்றால், எங்களுடைய 18 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஒரு நிலைப்பாடும், 11 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஒரு நிலைப்பாடும் எடுத்ததால் அவருக்கு எதிராகத்தான் வாக்களிப்பேன்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும், நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் நிச்சயமாக அ.ம.மு.க. போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில் ஐக்கியம்?

டி.டி.வி.தினகரன் கூறுவதின் அடிப்படையில் பார்த்தால் தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

இதனால் தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க.வில் தொடர்ந்து நீடிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. அடுத்தகட்ட நகர்வாக தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் மீண்டும் ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story