கள்ளக்காதலை கண்டித்ததால் கொன்று புதைக்கப்பட்ட மீனவரின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு மனைவி,கொழுந்தன் கைது;பரபரப்பு வாக்குமூலம்


கள்ளக்காதலை கண்டித்ததால் கொன்று புதைக்கப்பட்ட  மீனவரின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு மனைவி,கொழுந்தன் கைது;பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 July 2019 3:45 AM IST (Updated: 5 July 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.

கடலூர், 

கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை செய்யப்பட்ட மீனவரின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக கைதான மனைவி, கொழுந்தன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மீனவர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கூழையாறு கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் என்கிற முருகதாசன்(வயது 45). மீனவர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமிதா(34) என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பிறகு இருவரும் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் முறையே கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்போது 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கொழுந்தனுடன் கள்ளக்காதல்

இந்த நிலையில் முருகதாஸ் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். இதனால் முருகதாசின் தம்பி சுமேர்(30), அவ்வப்போது சிங்காரத்தோப்பில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அவருக்கும், சுமிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அந்த வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

திடீர் மாயம்

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுமிதாவின் தம்பிக்கு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முருகதாஸ் சவுதி அரேபியாவில் இருந்து கடலூருக்கு வந்திருந்தார்.

23.1.2013 அன்று முதல் முருகதாஸ் மாயமானார். இதனிடையே முருகதாஸ், மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டதாக உறவினர்களிடம் சுமிதா கூறினார். இதற்கிடையில சுமிதாவும், சுமேரும் திடீரென மாயமானார்கள்.

தாய் புகார்

இந்த நிலையில் முருகதாசின் தாயார் பவுனம்மாள்(67), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அந்த மனுவில், எனது மகன் வெளிநாடு செல்லவில்லை எனவும், அவனை சுமிதாவும், சுமேரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.

இது தொடர்பாக விசாரிக்க கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் முதலில் சுமிதாவையும், சுமேரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். கேரள மாநிலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரையும் போலீசார் பிடித்து, கடந்த 2-ந் தேதி கடலூருக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுமிதாவும், சுமேரும் சேர்ந்து முருகதாசை கொலை செய்து, உடலை வீட்டில் புதைத்தது தெரியவந்தது.

தோண்டி எடுப்பு

இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தும் பணி நேற்று நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அப்போது, கை, கால், தலை எலும்பு கூடுகள் கிடைத்தன. அவை பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

உல்லாசம் அனுபவித்தோம்

இதனை தொடர்ந்து சுமிதாவையும், சுமேரையும் கடலூர் துறைமுகம் போலீசார் கைது செய்தனர். போலீசில் சுமிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் முருகதாஸ், வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றதால் 2 குழந்தைகளுடன் சிங்காரத்தோப்பில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தேன். அப்போது எனது கணவரின் தம்பி சுமேர், அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது எனக்கும், சுமேருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி வீட்டில் உல்லாசம் அனுபவித்து வந்தோம். இதற்கிடையில் எனது தம்பியின் திருமணத்திற்காக சவுதி அரேபியாவில் இருந்து எனது கணவர் வந்தார். இருப்பினும் நானும், சுமேரும் தனிமையில் சந்தித்து வந்தோம்.

கொன்று புதைத்தோம்

ஒரு நாள் வீட்டில் நானும், சுமேரும் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்தோம். அப்போது வீட்டிற்கு வந்த முருகதாஸ், எங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் கடுமையாக கண்டித்தார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது நானும், சுமேரும் சேர்ந்து துண்டால் முருகதாசின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

பின்னர் வீட்டின் பின்புறம் குழிதோண்டி, முருகதாசின் உடலை புதைத்து விட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்து விட்டோம். 2 நாட்களுக்கு பிறகு முருகதாஸ் எங்கே என்று உறவினர்கள் கேட்டனர். அதற்கு நான், மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன்.

கேரளாவில் தங்கினோம்

இதன்பிறகு நானும், சுமேரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்தோம். அதற்காக 2 குழந்தைகளையும், புதுக்குப்பத்தில் உள்ள முருகதாசின் தாய் பவுனம்மாளிடம் விட்டுவிட்டு, சென்னைக்கு சென்றோம். அங்குள்ள ஒரு மெடிக்கலில் சுமேர் வேலை பார்த்தபடி, பி-பார்ம் படித்தார். படிப்பு முடிந்ததும் இருவரும் கேரள மாநிலம் மலபாருக்கு சென்று, வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தோம். முருகதாசை கொலை செய்து 6 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், இனிமேல் எந்த பிரச்சினையும் இருக்காது என்று நினைத்தேன். ஆனால் போலீசார் எப்படியோ எங்களை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

Next Story