மாநில செய்திகள்

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம் + "||" + Rajagopal's health concerns

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பிராட்வே, 

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடியை சேர்ந்த ஜீவஜோதியை 3-வதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். இதற்காக 2001-ம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை மூலம் கொடைக்கானலுக்கு கடத்திச்சென்று கொலை செய்தார்.

இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

ஐகோர்ட்டு அவருக்கு, ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஐகோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜூலை 8-ந் தேதிக்குள் சென்னை செசன்ஸ் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிட்டது.

கோர்ட்டில் சரண்

ஆனால் ராஜகோபால் மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் அவரை உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது. காலஅவகாசம் வழங்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்ததுடன், ராஜகோபால் உடனடியாக கோர்ட்டில் சரணடையும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 9-ந்தேதி மாலை ராஜகோபால், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை செசன்ஸ் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ராஜகோபால் சுவாசக்குழாய் மற்றும் மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டு, ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் சரண் அடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிறை கைதிகளுக்கான வார்டில் அனுமதிப்பட்டார். அன்று இரவே அவரது உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாரடைப்பு

ராஜகோபாலுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பதால் அந்தந்த பிரிவு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது.

அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் மருத்துவ எந்திரங்கள் உதவியுடன் இயங்கி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடல்நிலை கவலைக்கிடம்

ராஜகோபால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருடைய மகன் சரவணன், உறவினர்கள், நண்பர்கள், சரவணபவன் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வர தொடங்கினர்.

அவரது உடல்நிலை மிக கவலைக்கிடமாகவே உள்ளது. வெண்டிலேட்டரில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே ராஜகோபாலின் உடல்நிலை குறித்து முழுமையாக தெரியவரும் என ஸ்டான்லி ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.