கால்நடை மருத்துவப்படிப்பு பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது


கால்நடை மருத்துவப்படிப்பு பொது கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 July 2019 9:00 PM GMT (Updated: 25 July 2019 8:38 PM GMT)

கால்நடை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

சென்னை, 

கால்நடை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் (பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்.) படிப்புகளில் 25 இடங்களும், உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்பம் (பி.டெக்.) படிப்புகளில் 11 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதில் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் (பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்.) படிப்புகளுக்கு 68 பேரும், உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்பம் (பி.டெக்.) படிப்புகளுக்கு 36 பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அதேபோல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 18 இடங்களுக்கு 26 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முடிந்தது.

அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது. இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் (பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்.) படிப்புகளில் சேர இன்று நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு 789 பேரும், உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்பம் (பி.டெக்.) படிப்புகளுக்கு நாளை நடைபெற இருக்கும் கலந்தாய்வுக்கு 609 பேரும் அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைக்கிறார்.

Next Story