தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 29 July 2019 9:46 AM GMT (Updated: 29 July 2019 9:46 AM GMT)

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை,

உள்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 4 சென்டி மீட்டரும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தலா 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

தென் மேற்கு பருவமழையானது வழக்கத்தைக் காட்டிலும் தமிழகத்தில் 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.

13 சென்டி மீட்டர் பெய்ய வேண்டிய மழை, தற்போது வரை 9 சென்டி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை காலத்தில் சென்னையில் 17 சென்டி மீட்டர் பெய்ய வேண்டிய மழை, 25 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்ய வேண்டிய மழை, 26 சென்டி மீட்டர் அளவுக்கு பொழிந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 55 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. கோவையில் 74 சதவீதமும், தூத்துக்குடியில் 71 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 65 சதவீதமும், ராமநாதபுரத்தில் 67 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளது. 

Next Story