திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ரூ 10 கோடி வெள்ள நிவாரண பணிகளுக்கு வழங்கப்படும்: ஸ்டாலின்


திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ரூ 10 கோடி வெள்ள நிவாரண பணிகளுக்கு வழங்கப்படும்: ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Aug 2019 8:24 AM GMT (Updated: 12 Aug 2019 8:24 AM GMT)

வெள்ள நிவாரணப்பணிகளை அரசு முடுக்கி விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கடந்த இரு  தினங்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அவர் இன்று (திங்கள்கிழமை) மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். கனமழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஸ்டாலின், தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இதையடுத்து ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது-

தமிழக அரசு குறைந்தபட்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்காது.  இனிமேலும் இவ்வாறு மெத்தனமாக இருக்காமல், பணிகளை முடுக்கிவிட வேண்டும். திமுக இங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறது.

இத்தொகுதியின் எம்.பி. ஆ.ராசாவுக்கு இருக்கக்கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாயை ஒதுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். கூடலூர் எம்எல்ஏ திராவிட மணி, மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதேபோன்று, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் 5 பேரும் தலா ரூ.1 கோடி என 5 கோடி ரூபாய் வழங்க உள்ளார்கள். மொத்தம் 10 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமப்பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைத்து, தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story