நாளை நிலவின் முதல் வட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2


நாளை நிலவின் முதல் வட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2
x
தினத்தந்தி 19 Aug 2019 5:20 PM GMT (Updated: 19 Aug 2019 5:20 PM GMT)

நாளை நிலவின் முதல் வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும் என இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 என்ற விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

புவி வட்டப் பாதையில் இயங்கி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் வட்டப்பாதையை வெற்றிக்கரமாக கடந்தது. இதனையடுத்து அடுத்தடுத்து வட்டப்பாதையையும் வெற்றிக்கரமாக கடந்தது. கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.

இந்நிலையில் நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலம், நாளை காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் நாளை இயக்கப்பட உள்ளது. இது மிகவும் சவாலான மற்றும் முக்கியமான நகர்வு ஆகும்.

இதன் பின்னர், இஸ்ரோ விண்கலத்தின் திசையை நான்கு முறை (ஆகஸ்ட் 21, 28 மற்றும் 30 மற்றும் செப்டம்பர் 1) சுற்றுப்பாதையில் மாற்றப்படும். இதற்குப் பிறகு, அது நிலவின் துருவத்திற்கு மேலே 100 கி.மீ தூரத்தில் அதன் கடைசி சுற்றுப்பாதையை அடையும்.

பின்னர், செப்டம்பர் 2ம் தேதி விக்ரம் லேண்டர் சந்திரயான்-2 வில் இருந்து பிரிந்து சந்திர மேற்பரப்பில் சுற்றும். அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story