மாநில செய்திகள்

சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள் + "||" + Chennai Beach Shining blue at night What is the cause of sea waves Sensational information

சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
சென்னையில் இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகளை பார்த்து கடற்கரையில் கூடியவர்கள் அதிசயித்து போனார்கள்.
சென்னை,

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்’ திரைப்படத்தில், ‘நீல நிறம்.. வானுக்கும், கடலுக்கும் நீலநிறம்..’ என்ற பாடல் வரிகள் காதலியை வர்ணிப்பது போல் இடம் பெற்றிருக்கும். எல்லோரும் வானம் நீல நிறத்தில் இருப்பதை தினமும் பார்க்கிறோம். ஆனால் கடல் நீர் நீல நிறத்தில் இருப்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. உயரமான இடத்தில் இருந்து கழுகுப் பார்வையில் ஆழ்கடலை பார்க்கும்போது, அது நீல நிறத்தில் இருப்பது தெரியும். ஆனால், கரையோரம் அலையாக வரும் கடல் நீரை உற்றுநோக்கினால், அது எந்த நிறத்திலும் தெரியாது.


ஆனால், நேற்றுமுன்தினம் இரவு சென்னை திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடற் கரையோரம் சென்ற மக்கள் அதிசயம் ஒன்றை கண்டனர். கடலில் சீறி எழுந்த அலைகள் நீல நிறத்தில் ஜொலிப்பதை பார்த்தனர். ஆர்வம் மிகுதியால் சிலர், அதை தங்களது செல்போன் கேமராவில், வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து, வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர்.

பலர் இந்த தகவலை கேள்விப்பட்டு, உடனடியாக கடற் கரைக்கு நேரில் சென்று பார்த்தனர். ஒரு தரப்பினர் நீல நிற கடல் அலைகளை பார்த்து ஆச்சரியப்பட்டாலும், மற்றொரு தரப்பினர் பீதி அடைந்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர்.

பலருக்கு நடிகர் கார்த்தி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் வரும் காட்சிகள் கண்முன் தோன்றி பீதியை கிளப்பின. அந்த படத்தில் ஒரு காட்சியில், தீவு நோக்கி படகில் செல்லும்போது, கடல் நீர் திடீரென நீல நிறத்தில் ஜொலிக்கும். அப்போது கடலில் இருந்து துள்ளிவரும் மீன்கள் படகில் இருப்பவர்களை கடித்து குதறும். அதில் ஒரு சிலர் இறந்தும் போவார்கள். இந்த காட்சி நினைவுக்கு வந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால், நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரையோர பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

இரவு நேரத்தில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தது ஏன்? என்பது பற்றி கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “கடலில் வாழும் ஒரு செல் உயிரியான டைனோ ப்ளாச்சுலேட், கடல் மின்மினி பூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, எப்படி சோலார் விளக்குகள் எரிகிறதோ அதுபோல, இந்த உயிரினம் இருளில் ஒளி வீசுகிறது. ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் 1 லட்சம் ஒரு செல் உயிர்கள் குழுவாக இருந்து வெயிலின் வெப்பத்தை சார்ஜ் செய்து கொண்டு இரவில் ஒளி வீசுகின்றன. இந்த ஒரு செல் உயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது, ஒளி வெளியாகிறது. பல வகையில் இந்த உயிரி இருப்பதால், அதைப் பொறுத்து வெளியிடும் நிறங்களும் மாறுபடும். இவை இருக்கும் இடத்திற்கு மீன்கள் வந்தால் அவற்றை பயமுறுத்தி திசை திரும்பச் செய்யும்” என்றனர்.

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.பெலிக்ஸ் கூறும்போது, “இவை கடலில் அரிதாக தோன்றக்கூடியவை. மற்ற மிதவை நுண்ணுயிரிகளை போல் இன்றி சில பிரத்தியேக திறன் கொண்டவை. சிறிய இன மிதவை நுண்ணுயிரிகளை விரைவாக தனக்கு உணவாக்கி அவற்றை அழித்துவிடும். கடலில் விரைவாக நீரின் தரத்தில் பல மாற்றங்களை உண்டாக்கி, மீன் இனத்தை அழிக்கவும் செய்யும். இதை உயிர் ஒளிர்வு தாக்கம் என்றும் கூறலாம். கடலின் இயற்கை மற்றும் நிலைத்த தன்மையை கெடுத்து விடும். இதை கடலில் பிரகாசிக்கும் மிதவை நுண்ணுயிரிகள் என்றும் அழைப்பார்கள்” என்றார்.

மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இரவு நேரத்தில் கடல்நீர் நீல நிறத்தில் ஜொலித்தது குறித்து, பரிசோதனைக்கு பிறகே எந்த முடிவையும் கூற முடியும். ஆனால், அதுபற்றிய தகவல் எங்கள் கவனத்திற்கு எதுவும் வரவில்லை” என்றார்.

பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளருமான அசோக சக்கரவர்த்தி கூறும்போது, “இது ஒரு அரிய சம்பவமாக இருக்கலாம். ஆனால் இது கடலில் ஏற்படும் நிகழ்வுகளில் ஒன்றுதான். இந்த ஆண்டு ஜூலை மாதம் உலகின் வெப்பமான மாதமாக பதிவாகி இருக்கிறது. எனவே கடல் நீரில் வெப்பம் அதிகமாகவே பரவி இருக்கலாம். இதற்கு காரணம் ‘டைனோ ப்ளாச்சுலேட் ஆல்கே’ என்பது தான். இந்த டைனோ ப்ளாச்சுலேட் ஆல்கே என்பது ஒரு லிட்டர் நீரில் 20 மில்லியன் செல்களை பரவ செய்யும் சக்தி கொண்டது. இது பகலில் நீரை சிவப்பு நிறத்திலும், இரவு நேரத்தில் நீல நிறத்திலும் ஒளியை உமிழச் செய்யும். இது பயப்படக்கூடிய விஷயம் கிடையாது. இந்த நடைமுறை ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை நீடிக்கலாம். இந்த காலகட்டத்தில் கடலில் நீந்துவதை தவிர்க்கலாம். நிறம் உமிழ் நடவடிக்கை தொடரும் வரையில் கடல் உணவுகளை ஓரளவு தவிர்க்கலாம்” என்றார்.

இதே போல், காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கடல் பகுதியிலும் கடந்த இரு தினங்களாக கடல் இருவித நீல நிறத்தில், அதாவது பாதி கடல் பகுதி வெளிர்நீல நிறத்திலும், மறுபாதி அடர் நீல நிறத்திலும் காட்சி அளித்தது. கடல் திடீரென இரண்டு வித நீல நிறத்தில் காட்சி அளித்ததை சுற்றுலா பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்றனர்.

இதை அங்கு வந்து வெளிநாட்டு பயணிகள் பலர் தங்களது செல்போனிலும், கேமராவிலும் புகைப்படமாக எடுத்துக்கொண்டனர். மாமல்லபுரம் மீனவர்கள் கூறும்போது, பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் கடலில் அவ்வப்போது நடப்பது வழக்கமானது என்று கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை கடற்கரையில் 2-வது நாளாக நுரை வெளியேற்றம்
சென்னை கடற்கரையில் நேற்று 2-வது நாளாக அதிகளவு நுரை வெளியேறியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
2. சென்னை கடற்கரை-அரக்கோணம் மார்க்கத்தில் இரவு நேர மின்சார ரெயில்களில் பாதுகாப்பு இல்லை பயணிகள் புகார்
சென்னை கடற்கரை- அரக்கோணம் மார்க்கத்தில் இரவு நேர மின்சார ரெயில்களில் பாதுகாப்பு இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.