பட்டுப்போன தென்னை மரத்துக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க பிரதமரிடம் கோரிக்கை - எடப்பாடி பழனிசாமி பேச்சு


பட்டுப்போன தென்னை மரத்துக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க பிரதமரிடம் கோரிக்கை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 20 Aug 2019 11:30 PM GMT (Updated: 20 Aug 2019 11:12 PM GMT)

பட்டுப்போன தென்னை மரத்துக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சியில் அபிநவம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது, நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் பனை விதை நடவு தொடக்கவிழாவில், அபிநவம் ஏரிக்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பனை விதைகளை ஊன்றினார். பின்னர், அவர் பேசியதாவது:-

குடிமராமத்து எனும் மிகப்பெரிய திட்டத்தின் மூலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அபிநவம் ஏரியை தூர்வாருவதால், சுமார் 424.53 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குடிமராமத்து திட்டமானது விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் திட்டமாக அமைந்துள்ளது.

அபிநவம் ஏரியை தூர்வாரும் பணியை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காக இப்பகுதி விவசாய சங்க தலைவர் ஜெயராமனுக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, அபிநவம் ஏரியை தூர்வாரும் பணிக்கு என்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குகிறேன். விவசாயிகளும், ஆயக்கட்டுதாரர்களும், ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, கண்ணை இமை காப்பது போல் ஏரிகளைக் காக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பிரச்சினையை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், அவரது வழியில் அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி, சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பை பெற்றது. மத்தியில் எத்தனையோ பேர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்யத்தவறினார்கள், ஆட்சி அதிகாரம் தான் அவர்கள் கண்களுக்கு தெரிந்தது. ஆனால், அ.தி.மு.க. அரசுக்கு விவசாயிகள் தான் கண்ணுக்கு தெரிந்தார்கள். விவசாயிகளின் நிலையை உணர்ந்து, அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் போராடி, வாதாடி காவிரி நதிநீர் தீர்ப்பை பெற்ற அரசு அ.தி.மு.க. அரசு.

தமிழ்நாடு அரசு, நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி, ஓய்வுபெற்ற பொறியாளர்களை கொண்ட குழுவை அமைத்து, அக்குழுவின் ஆய்வறிக்கையின்படி அ.தி.மு.க. அரசு செயலாற்றிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் நீர் மேலாண்மை சிறப்பாக இருப்பதால், அதனை அறிந்து வந்து தமிழ்நாட்டில் செயல்படுத்தும் நோக்கில், என்னுடைய தலைமையில் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு பின்பற்றப்பட்டு வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தண்ணீரை மறுசுழற்சி செய்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் முறை செயல்படுத்தப்படும்.

சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை சேமித்து வழங்குவதால், சாதாரணமாக ஒரு ஏக்கர் பாசனம் பெறும் விவசாய நிலம், சொட்டுநீர் பாசனம் மூலம் 10 ஏக்கர் பாசன வசதி பெறும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பரீட்சார்த்த முறையில், பொள்ளாச்சியில் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 7,200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

மக்காச்சோளம் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, அப்பயிரை அமெரிக்கன் படைப்புழு தாக்கியதற்கு ரூ.184 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தென்னை மரம் பட்டுப்போனால் அதற்கான இழப்பீடாக மத்திய அரசால் ரூபாய் நூறும், மாநில அரசால் ரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசு மக்களின் அரசு, விவசாயிகளுக்கான அரசு. விவசாய பெருங்குடி மக்கள் குடிமராமத்து திட்டத்தை பயன்படுத்தி மழைநீரை வீணாகாமல் சேமித்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, பால் கொள்முதல் விலையை உயர்த்தியமைக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 8 விவசாய சங்கங்களின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து, கன்றுடன், பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து எடப்பாடி பழனிசாமி மனுக்களை பெற்றுக்கொண்டார். தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். கூலி தொழிலாளர்களுக்காக அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையானதை கண்டறிந்து அவற்றை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து ஆத்தூர் மற்றும் வாழப்பாடியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் 13 ஆயிரத்து 296 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

Next Story