காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து: மாநில உரிமை காத்திட அனைத்து கட்சிகளும் போராடவேண்டும் திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தீர்மானம்


காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து: மாநில உரிமை காத்திட அனைத்து கட்சிகளும் போராடவேண்டும் திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 27 Aug 2019 11:02 PM GMT (Updated: 2019-08-28T04:32:06+05:30)

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மாநில உரிமை காத்திட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்,

திராவிடர் கழக 75-ம் ஆண்டு பவள விழா மாநாடு சேலம் அம்மாபேட்டையில் உள்ள கொங்கு வெள்ளாள திருமண மண்டபத்தில் நேற்று காலையில் தொடங்கி நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் சாதி ஒழிப்பு, தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றை தடுக்க எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். பெரியார் காலத்தில் இருந்த எதிரிகள் நேர்மையான எதிரிகள். ஆனால் தற்போது உள்ள எதிரிகள் சூழ்ச்சியானவர்கள். எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இரட்டை குழல் துப்பாக்கி

தமிழர் என்பது மொழியின் பெயர். ஆனால் திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயர். திராவிடம் குறித்து குழப்புபவர்கள் ஆரியத்தின் மாய மான்கள். அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தி.மு.க. மற்றும் தி.க. இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்படுகிறது.

தி.மு.க. அரசியலை பார்த்து கொள்ளும், திராவிடர் கழகம் அதற்கு அணியை உருவாக்கி பாதுகாக்கும். திராவிடர் கழகம் எங்களுக்கு பயிற்சி பட்டறை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதத்தால், மொழியால் வேறுபட்டு இருந்தாலும் திராவிடர் என்ற இனத்தால் ஒன்றுபட்டுள்ளோம். சாதி ஒழிப்பு, பெண் அடிமைக்கு எதிரான அறப்போரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பேசினார்.

தீர்மானங்கள்

திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றி, மத்திய அரசு அதனை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

* அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் உடனடி பணி ஆணை வழங்கிட வேண்டும்.

* தேசிய கல்விக்கொள்கை வரைவை திரும்பப்பெற வேண்டும்.

* நீட், நெக்ஸ்ட் தேர்வுகள் நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.

* சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

* காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மாநில உரிமை காத்திட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

இவை உள்பட 25 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story