ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை மாற்றியதை எதிர்த்து: தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு - வழக்கு விசாரணை பெரிதும் பாதிப்பு


ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை மாற்றியதை எதிர்த்து: தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு - வழக்கு விசாரணை பெரிதும் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 11:30 PM GMT (Updated: 10 Sep 2019 10:25 PM GMT)

தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றியதை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை ஐகோர்ட்டு உள்பட அனைத்து கோர்ட்டுகளிலும் வழக்கு விசாரணை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன் பதவியை வி.கே.தஹில்ரமானி ராஜினாமா செய்தார்.

அவரது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி சக நீதிபதிகள் கூறியும், அதை அவர் ஏற்கவில்லை. திங்கட்கிழமை முதல் அவர் ஐகோர்ட்டுக்கு வரவில்லை.

இந்த நிலையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியை பணியிடம் மாற்றிய முடிவை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை அறிவித்தன.

இதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் பலர் கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் பல வழக்குகளின் விசாரணை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டது. ஐகோர்ட்டு வளாகத்தில் வழக்கமான கூட்டம் இல்லாமல், மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வக்கீல்களும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் ஐகோர்ட்டு நுழைவுவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்கத்தின் துணை தலைவர் சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் நளினி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது, ‘தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்த முடிவை உடனே வாபஸ் பெறவேண்டும்’ என்றும் ‘நீதிபதிக்கே நீதி இல்லையா?’ என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

வக்கீல் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கூறும்போது, “தலைமை நீதிபதியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாறுதல் செய்தது மிகவும் வருத்தமாக உள்ளது. சென்னை ஐகோர்ட்டு பாரம்பரியமான ஐகோர்ட்டு. 75 நீதிபதிகளுடன், லட்சக்கணக் கான வழக்குகள் தாக்கலாகும் இந்த ஐகோர்ட்டில் இருந்து 3 நீதிபதிகளே உள்ள மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாறுதல் செய்வது ஏற்புடையதல்ல. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றார்.

பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் நளினி கூறும்போது, “நீதிபதிகள் இடமாறுதல் நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தலைமை நீதிபதியின் இட மாறுதலுக்கான காரணம் தெளிவாக இல்லை. சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் குழு விரைவில் டெல்லி சென்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவை சந்தித்து முறையிட உள்ளோம். அதேநேரம், சுயமரியாதைக்காக நீதிபதி பதவியையே தூக்கிவீசிய தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியின் முடிவு எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றார்.

ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் கூறும்போது, “தலைமை நீதிபதி இடமாறுதலை கண்டித்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் அமைதியான முறையில் ஈடுபட்டுள்ளனர். தலைமை நீதிபதி இடமாறுதல் முடிவை சுப்ரீம் கோர்ட்டு மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றார்.

Next Story