வெளிநாட்டு பயணம் மேலும் தொடரும்: நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்கிறேன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


வெளிநாட்டு பயணம் மேலும் தொடரும்: நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்கிறேன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2019 12:00 AM GMT (Updated: 10 Sep 2019 10:31 PM GMT)

நீரை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்வதாகவும், தனது வெளிநாட்டு பயணம் மேலும் தொடரும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்க்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- உங்கள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?

பதில்:- தொழில் முதலீட்டாளர்கள், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்ததைவிட ஆர்வமாக இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் தங்கி தொழில் செய்பவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழகத்திலிருந்து எந்தவொரு முதல்-அமைச்சரும் வெளிநாடு செல்லவில்லை என்ற குறைபாடு இருந்தது. அந்த குறைபாட்டை இப்போது தீர்த்து வைத்திருக்கிறோம்.

கேள்வி:- கோட், சூட் அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தோம். நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்திருக்கிறீர்களே?

பதில்:- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறோம். அயல் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சந்திக்கும்போது, அவர்கள் உடையில் இருந்தால்தான் அது சரியாக இருக்கும். நம்முடைய விருப்பத்தை தெரிவிக்காமல் அவர்களுடைய விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

கேள்வி:- வெளிநாடு சென்று அதிக அளவில் முதலீடு ஈர்க்கப்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் தொடர்ச்சியாக அமைச்சர்கள், முதல்-அமைச்சர் மீது விமர்சனங்களை முன்வைக்கிறாரே?

பதில்:- நான் முதல்-அமைச்சராக பதவி ஏற்றது முதல் இன்று வரை எதிர்ப்புக்குரல்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் நினைத்தது நடக்கவில்லை, அந்த எரிச்சல், பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார். முதல்-அமைச்சர் மட்டுமல்லாமல், மற்ற அமைச்சர்களும் அவரவர் துறை சார்ந்த புதிய திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார்கள்.

கேள்வி:- பபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணைக்கு நேரில் சென்றீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்:- அது மிகச் சிறப்பாக இருந்தது. குறைந்த ஆட்களைக் கொண்டு நவீன முறையில் அதைப் பராமரிக்கிறார்கள். தமிழ்நாட்டில், பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில், அதாவது ஒரு மாவட்டத்தில் 70 ஆயிரம் லிட்டர் முதல் 80 ஆயிரம் லிட்டர் வரை பால் சேகரிக்கிறோம். ஆனால் அங்கு ஒரே இடத்தில் ஒரு பண்ணையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கறக்கிறார்கள்.

தமிழகத்தில் விவசாயிகளின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. இங்கு இருக்கும் கால்நடைகள் ஒரு நாளைக்கு 15 முதல் 20 லிட்டர் பால் மட்டும்தான் கறக்கிறது. ஆனால், அங்குள்ள பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கறக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலமாக, அவர்கள் கூடுதல் வருமானம் பெறமுடியும்.

அந்த தொழில்நுட்பத்தை கண்டறியச் சென்றோம். அங்கிருக்கின்ற கால்நடைகளின் ஒவ்வொரு கன்றுக்கும் ஒரு பிளாஸ்டிக் கூண்டு கட்டி, கூடாரம் அமைத்து, வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான தட்பவெப்ப நிலையை உருவாக்கி, தீவனம் கொடுத்து, குழந்தைகளைப் போல் வளர்க்கிறார்கள். இவற்றையெல்லாம் நேரடியாகச் சென்று அறிந்து, அதனை தமிழ்நாட்டிலும் பயன்படுத்துகின்றபோது உபயோகமாக இருக்கும்.

கேள்வி:- 40 ஆண்டுகளுக்கு பின் ஒரு தமிழக முதல்-அமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள், அங்கு வாழும் மக்கள் எந்த அளவிற்கு உங்களை வரவேற்றார்கள்?

பதில்:- அனைவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் மைலுக்கு வெளியே வசிப்பவர்கள்கூட வந்து நியூயார்க்கில் வரவேற்றார்கள். அங்கு உழைப்பதற்கென்றே தமிழர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன், அந்த அளவிற்கு உழைக்கிறார்கள், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பல தொழிலதிபர்கள் என்னை சந்திக்கிறபோது, தமிழகத்தில் ஐ.டி. பூங்கா அமைப்பதற்கு நாங்கள் முன்வருகிறோம் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்காவின் ஐ.டி. களத்தில் 35 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள்.

கேள்வி:- உங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பிற நாடுகளுக்கும் தொடருமா?

பதில்:- நிச்சயமாக தொடரும். அடுத்தது இஸ்ரேல் செல்லவிருக்கிறோம். ஏனென்றால், நாம் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை இஸ்ரேலில் 7 ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன வசதியை புகுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். அதுமட்டுமல்லாமல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். நம் மாநிலத்தில் பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்படுவதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துதலை அறிந்து வருவதற்கு இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.

கேள்வி:- வெளிநாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவக்கூடிய நிலையில், தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முதலீட்டில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமென்று நினைக்கிறீர்களா?

பதில்:- பாதிப்பு ஏற்படுமென்றால் எப்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவார்கள்? இந்தியாவில் தொழில் துறையில் இரண்டாவதாகவும், சிறு தொழிலில் முதன்மையாகவும் இருப்பது தமிழ்நாடு. இவையெல்லாம் தெரிந்து தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

கேள்வி:- வெளிநாடுகளில் தமிழை கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், லண்டன் மாநகரில் தமிழில் உரையாற்றினீர்கள். அந்த அனுபவம் எப்படி உள்ளது?

பதில்:- வெளிநாட்டில் தமிழில் உரையாற்றுவது பெருமையாக இருந்தது. நம்முடைய கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் அவரவர் மொழியில் சொன்னால்தான் அவர்களுக்கும் புரியும்.

அவர்களுக்கு புரிகின்ற மொழியில் பேசினால்தான் அவர்கள் தெரிந்துகொண்டு, இங்கே வந்து புதிய தொழில் தொடங்குவார்கள். அந்த அடிப்படையில், சில நேரங்களில் ஆங்கிலத்திலும், சில நேரங்களில் தமிழிலும் பேசினேன்.

கேள்வி:- எந்த அளவிற்கு தமிழ் முதலீட்டாளர்களிடம் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது?

பதில்:- இப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று அனைத்து தமிழர்களும் ஆர்வத்தோடு கைதட்டி, ஆரவாரத்தோடு, மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 2.50 மணிக்கு விமானம் மூலம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி முதலில் மலர்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.

அவரைத்தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையில் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் ஆலோசித்தார்.

பின்னர் வெளியே வந்த அவர், பழைய விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை வரை சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது தொண்டர்களிடம் இருந்து சால்வை, மலர்கொத்துகளை அவர் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் காரில் ஏறி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். முதல்-அமைச்சர் வருகையால் மீனம்பாக்கம் பகுதியில் அதிகாலை 6 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுவிட்டு தமிழகம் திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்திற்கு சென்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Next Story